”காங்கிரஸ் வாக்குகளை நீக்கிவிட்டால், திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வரமுடியுமா?” - பிரவீன் சக்கரவர்த்தி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கூட்டணி ஆட்சி குறித்தான குரல்கள் எழுந்து வருகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு அணித் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் தவெக தலைவர் விஜயை சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் தான், தமிழக காங்கிரஸ் தலைமை தொடர்ந்து தவெகவுடன் கூட்டணி என்பதை திட்டவட்டமாக மறுத்தும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தெரிவித்து வருகிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிலையில், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு அணித் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அளித்த பேட்டியில், ”தமிழ்நாட்டில் 75 சதவீத காங்கிரஸ் தொண்டர்கள் அதிகாரப்பகிர்வை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழக காங்கிரஸில் சில தலைவர்கள், தங்களது மொத்த அரசியல் வாழ்வையே திமுகவுக்காக அர்ப்பணித்திருப்பதாகவும், மஹாராஷ்ட்ரா, பிகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் அதிகாரப்பகிர்வு பெறும்போது ஏன் தமிழ்நாட்டில் பெறமுடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு வகித்ததாகவும், அதேபோல தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்காற்றினால் காங்கிரஸ் கட்சி வளரும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக அரசியலுக்கு எதிராக மிகப்பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் எந்தத் தருணத்திலும் பாஜகவுக்கு எதிராக செயல்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. ஆகையால், காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் வாக்களிப்பார்கள்” என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸின் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால், திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வரமுடியுமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். விஜய் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸின் அதிகாரப்பகிர்வு மற்றும் அதிக சீட்டுகள் நிபந்தனையை ஏற்கும் எந்தக் கட்சியும் தங்களது இயல்பான கூட்டணிதான் என்றும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

