ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. வறுமையில் வாடும் குடும்பம்
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு - காட்டுவிளையில் இருக்கிறது அந்த வீடு. வறுமைக்கான அடையாளங்கள் அத்தனையும் படிந்திருக்கிறது அந்த வீட்டில். படுத்த படுக்கையாக இருக்கிறார் வீட்டின் பெரியவர் சிதம்பர தாஸ். துயரம் தோய்ந்த கண்களுடன் உடனிக்கிறார் அஜிதா. பெற்று வளர்ந்த ஆசை மகன், நல்லபடியாக உயர்ந்து ஆளாகி, தங்களை பார்த்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமளித்ததால், இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள் இவர்கள்.
இந்தத் தம்பதியின் மகன் நிஷாந்த், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கியுள்ளார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி, ராஜஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்களித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்த நிஷாந்த், அந்த வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்து போயுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், 10 ஆண்டுகளுக்கு முன், வீட்டில் தூக்கு போட்டு, உயிரை மாய்த்துக் கொண்டார் நிஷாந்த்.
இந்த அதிர்ச்சியில், சுயநினைவை இழந்து படுத்த படுக்கையாகியுள்ளார் தந்தை சிதம்பர தாஸ். அவருக்கான சிகிச்சைக்காக வாங்கிய கடன், கழுத்தை நெரிக்க, பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளார் நிஷாந்தின் தாய் அஜிதா.
வேலையின்றி, வருமானம் இன்றி, கணவரை கவனித்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் அஜிதா. தற்போது வீட்டின் அருகே உள்ள சிறிய உணவகத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். இது அன்றாட செலவுக்கே போதாத நிலையில், கணவருக்கு மருந்துகள் வாங்கவோ, கடனை அடைக்கவோ முடியாமல், மகனின் புகைப்படத்தையும் அவர் அணிந்து விளையாடிய ஜெர்ஸியையும் வைத்துக் கொண்டு ஏக்கத்துடன் காத்திருக்கிறார் அஜிதா.