நைஜர் | ஆஸி. நிறுவனத்தின் அத்துமீறல்.. தேசிய மயமாக்கப்பட்ட ஒரேயொரு தங்கச் சுரங்கம்!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில், அதிபராக இருந்தவர் முகம்மது பசோம். இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம், திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அந்நாட்டு அதிபராக இருந்த முகமது பசோம் தலைமையிலான அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, நைஜரின் எண்ணற்ற பாதுகாப்புப் பிரச்னைகளைத் தகர்ப்பதாக உறுதியளித்து, இராணுவ ஆட்சிக்குழு மேற்கு ஆப்பிரிக்க நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அதன்படி, நைஜர் நாட்டின் ஒரேயொரு தங்கச் சுரங்கமான சொசைடே டெஸ் மைன்ஸ் டு லிப்டாகோவை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனமான மெக்கினல் ரிசோர்சஸ் லிமிடெட், 2019ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வந்தது.
அந்த தங்கச் சுரங்கத்தை மெக்கினல் நிறுவனம் கையகப்படுத்தியதிலிருந்து, பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக நைஜரின் இராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய நிறுவனம் 10 மில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறியதற்காக அது விமர்சித்தது. இது வரி மற்றும் ஊதிய நிலுவைகள், தொழிலாளர் பணிநீக்கங்கள் மற்றும் கணிசமான அதிகரித்த கடன் மற்றும் உற்பத்தி நிறுத்தங்களுக்கு வழிவகுத்ததாக இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனம் பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அதனை தேசியமயமாக்குவதாக ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் அப்துரஹமானே தியானி அறிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில், சுரங்கத்தில் தொழில்துறை தங்க உற்பத்தி 177 கிலோகிராமாக இருந்தது. அதேநேரத்தில் நாட்டில் கைவினைஞர் உற்பத்தி மொத்தம் 2.2 டன்களாக இருந்தது என்று எக்ஸ்ட்ராக்டிவ் இண்டஸ்ட்ரீஸ் டிரான்ஸ்பரன்சி இனிஷியேட்டிவ் அறிக்கை தெரிவிக்கிறது.