பேரிடர்களின் துயர பிரதேசம்.. உத்தரகாண்ட்டில் 9 ஆண்டுகளில் மட்டும் இத்தனை இழப்புகளா?
பனிப்போர்வையை போர்த்தி விளையாட சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீகத்தில் கரைந்து போக பக்தர்களும் குவியும் உத்தராகண்ட் மாநிலம், பேரிடர்களின் பிரதேசமாகி வருகிறது. கடந்த 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலக்கட்டத்தில், 18 ஆயிரத்து 464 இயற்கைச் சீற்றங்கள் அம்மாநில மக்களின் வாழ்வை புரட்டிபோட்டுள்ளதுடன், பெருமளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. சராசரியாக ஆண்டிற்கு, 2 ஆயிரத்து 51 பேரிடர்கள் உத்தராகண்ட்டில் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்த பேரிடராக கனமழையும், வெள்ளமும் உள்ளன. 12 ஆயிரத்து 758 மழை, வெள்ளப் பேரிடர்கள் அம்மாநிலத்தைத் தாக்கியுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும், 67 மேகவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன. 9 ஆண்டுகளில் இந்த பேரிடர்களால், 3 ஆயிரத்து 667 கான்கிரீட் மற்றும் சாதாரண வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. அதேபோல், 9 ஆயிரத்து 556 கான்கிரீட் வீடுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூரை வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன. இயற்கை பேரிடரை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அம்மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.