2025 வடகிழக்கு பருவமழை.. இது லா நினா ஆண்டா? அப்படினா புயல் கண்டிப்பாக உண்டா?
இந்த ஆண்டு லா நினா ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவமழையில் அதிக மழைப்பொழிவு மற்றும் புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கலாம். கடந்த காலங்களில், லா நினா ஆண்டுகளில் கடுமையான புயல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், 2025ஆம் ஆண்டும் புயல் வரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 5% அதிகம் மழை பெய்த நிலையில், செப்டம்பர் மாதம் சராசரியாக 109% மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.. அதைப்போலவே செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருந்து வருகிறது..
இந்த ஆண்டு இதுவரை பெய்தமழையின் அளவு 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு 13ஆவது அதிகபட்ச மழை பொழிவாகவும் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகான அதிகபட்ச மழைப்பொழிவாகவும் பதிவாகியுள்ளது.. இந்நிலையில்தான் 2025ஆம் ஆண்டு லா நினா ஆண்டு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
கடல்சார் அலைவுகள் பரவலான மழைப்பொழிவுக்கு சாதகமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய எல் நினோ (El Niño) லா நினா (La Niña) போன்றவற்றை கணிக்க வேண்டும்.. அப்படி அவற்றை கணிக்க உதவுவது எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) சுழற்சியாகும்..
இந்த எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) என்பது ஒரு ஒற்றை காலநிலை நிகழ்வு என்றாலும், இது மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.. அவை எல் நினோ, லா நினா மற்றும் நடுநிலை. இதைபயன்படுத்தி வானிலை ஆய்வு மையம் பசுபிக் பெருங்கடலில் இருக்கும் வெப்பநிலையை கணக்கிட்டு குறிப்பிட்ட ஆண்டில் எல் நினோவா அல்லது லா நினாவா என்பதை வகைப்படுத்துகிறது.. கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் எல் நினோ நியூட்ரலில் இருந்தது. இதனால் பரவலான மழைப்பொழிவாக இல்லாமல் சிறு சிறு காற்று சுழற்சிகளாக உருவாகி மேகவெடிப்புக்கு சாதகமாக அமைந்தது..
ஆனால் இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இந்த லா நினா அதிகாரபூர்வமாக கணிக்கப்பட்டுள்ளது.. இந்த லா நினா ஆண்டில் இயல்பாகவே அதிகமான மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர்.. கடந்த காலங்களில், இந்த லா நினா ஆண்டுகளில் கடும் மழைபொழிவும் புயலும் இருந்துள்ளது.. இதுவரை தமிழகத்தை பல புயல்கள் தாக்கியிருந்தாலும் 2004க்குப் பிறகு தான் புயலுக்கு பெயர் வைக்கப்பட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.
கடந்த 1973-1976ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் லா நினா ஆண்டாக இருந்தது.. அப்போது குறிப்பாக 1976-ல், வட இந்தியப் பெருங்கடலில் பல புயல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
அதுபோலவே 1988-1989 ஆம் ஆண்டிலும் லா நினா இருந்தது.. அப்போது, குறிப்பாக 1989ல், இந்தியப் பெருங்கடலில் 'கே' சூப்பர் சைக்ளோனிக் புயல் போன்ற சக்திவாய்ந்த புயல்கள் உருவாகின. அதேசமயம் அமெரிக்காவில் ஒரு பெரிய வெப்ப அலை மற்றும் வறட்சியும் ஏற்பட்டது
முன்பாக 1966 ஆம் ஆண்டு பெயர் வைக்கப்படாத புயல் ஒன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், புயல் வடக்கு நோக்கு நகர்ந்து சென்னையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
அது போலவே 1998-2001, 2010-2012 மற்றும் 2020-2023 ஆகிய ஆண்டுகளும் லா நினா ஆண்டாக இருந்தது.. இதில், 1973-1976, 1998-2001 மற்றும் 2020-2023 ஆகிய மூன்று காலக்கட்டங்கள் லா நினாவின் தொடர்ச்சியான மூன்று ஆண்டுகள் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாகும்.
இதில் கடந்த 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அடுத்தடுத்து வங்கக் கடலில் 3 புயல்கள் உருவானது. அதற்கு பியார், பாஸ், ஃபர்னூஸ் என்று பெயரிடப்பட்டது.. அப்போது பெய்த சுமார் 773 மில்லி மீட்டர் மழையால் தமிழகமே வெள்ளக்காடானது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு 2008-ம் ஆண்டுவங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக உருமாறியது. இதற்கு நிஷா புயல் என்று பெயரிடப்பட்டது.. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கக் கடலில் உருவான மிகப்பெரிய புயலென்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.. இந்த புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 189 பேர் உயிரிழந்தனர்..
அதன் பிறகு 2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் பக்கம் நகர்ந்து வந்து 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. அதனை தொடர்ந்து 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான அதி தீவிரப் புயல் தானே புயல் என பெயரிடப்பட்டப்பட்டது... இந்த புயலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.
அதன் பிறகு 2012 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவது அதி தீவிர இப்புயல் ஒன்று உருவானது.. அது ஈலம் புயல் என பெயரிடப்பட்டது.. முதலில் வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு புயலாக மாறியது..
2016ஆம் ஆண்டு 4 புயல்கள் உருவானாது.. அதில் வர்தா புயல் டிசம்பர் 12 ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்து, டிசம்பர் 13 ஆம் தேதி கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.
2017ஆம் ஆண்டில் ஒக்கி புயல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் உருவானது.. இப்புயல் இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு, இலட்சத்தீவுகளை கடந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது.
அடுத்ததாக கஜா புயல். இது 2018ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகியது. இந்தப் புயலால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலத்த சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
2020ஆம் ஆண்டு புரேவி புயல் உருவானது. இது தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பிறகு புயலாக மாறியது. இப்புயலானது பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. 2022ஆம் ஆண்டு மாண்டஸ் புயல் தென்கிழக்கு மண்டலத்தில் உருவாகி பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு புயலாக உறுவானது.
அடுத்ததாக மிக்ஜாம் புயல் 2023ஆம் ஆண்டில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாகி, பின் புயலாக வலுப்பெற்று சென்னைக்கு மிக அருகே பயணித்து ஆந்திரா அருகே கரையைக்கடந்தது. இப்புயலால் கடந்த 47 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக மழையை கொடுத்துள்ளது. இதன் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியாக இதுவரை பலத்த புயல் அடித்த காலங்களில் லா நினா ஆண்டாக இருந்துள்ளது.. இந்த லா நினா காலநிலையின் போது கடலின் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக குளிர்ந்து காணப்படும்.. அதனால் அப்போது கடுமையான புயல் உருவாக்ககூடும் என சொல்லப்படுகிறது.. அது போலவே இந்த ஆண்டும் கண்டிப்பாக புயல் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது..

