"தனியார் பல்கலைக்கழக (திருத்த) மசோதா மறுஆய்வு"- எதிர்ப்புக்கு இடையில் அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கடந்த-15 ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான திருத்தச் சட்டமுன்வடிவு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கராக உள்ள நிலையில், அந்த விதியை தளர்த்தி புதிய மசோதாவில் மாநகராட்சியில் 25 ஏக்கரும், நகரங்களில் 35 ஏக்கரும், பிற பகுதிகளில் 50 ஏக்கரும் இருக்கும்படி குறைந்தபட்ச நில அளவு வரையறுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவிற்கு சமூக ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களுக்கான திருத்தச் சட்ட முன்வடிவு மறு ஆய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உயர்கல்வியை பொறுத்தவரை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019, பிரிவு 4-இன்படி, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.
எனவே, வேகமாக நகரமயமாகி வரும் தமிழ்நாட்டில் நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கும், பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக தங்களை மாற்றிக்கொள்ள / தரம் உயர்த்திக்கொள்ள விழையும்போதும் மேற்படி குறைந்தபட்ச நில அளவின் தேவை ஒரு சவாலாக உள்ளது. இந்தச்சூழ்நிலையில் பிற அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க, நிலத்தின் அளவு குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களாக மாற விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்துகள் பெறப்பட்டன.
எனவே, மாணவர் சமூகத்தின் நலனுக்காகவும், மாநிலத்தில் உயர்கல்வியை மேலும் மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குத் தேவையான நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.அதேசமயம், சமூகநீதியிலும் உயர்கல்வி மேம்பாட்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட திராவிட மாடல் அரசு, எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது.
இருப்பினும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான திருத்தச் சட்ட முன்வடிவு குறித்து சட்டமன்றப் பேரவையில் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை தொடரலாம் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவை திரும்ப பெறுங்கள் - திருமாவளவன்
உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை'த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன அவற்றில் இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை 22 பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 26 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்தப் புள்ளி விவரங்கள் ஏற்கனவே உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் பண்டம் ஆகிவிட்டது என்பதையே காட்டுகிறது.
இந்நிலையில் இந்த சட்டத் திருத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி வணிகத்தை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். அது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம். உயர்கல்வி தனியார் மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும்; கல்விக் கட்டணம் அதிகரிக்கும்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள். எனவே, மாணவர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

