பாமகவின் இரு அணிகளும் ஒன்றுபடுமா? முக்கியக் கோரிக்கைகள் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாமகவின் இரு அணிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க அதிமுகவும் பாஜகவும் முயற்சிக்கின்றன. ராமதாஸ் மற்றும் அன்புமணி அணிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிளவுபட்டுக் கிடக்கும் பாமகவை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க, அதிமுகவும் பாஜகவும் தனித் தனியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு பாமகவின் இரு அணிகளும் சம்மதம் தெரிவிக்குமா? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த, அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, பிளவுபட்டுக் கிடக்கும் பாமகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே. 2024 மக்களவைத் தேர்தலின்போது, கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு உருவானது. தற்போது அது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் விரும்பிய அதிமுகவும், அன்புமணி விரும்பிய பாஜகவும் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளன.
இதனால், ராமதாஸ் தலைமையிலான பாமகவையும், அன்புமணியின் பின்னால் திரண்டுள்ள பாமகவின் இன்னொரு அணியையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான வைஜெயந்த் பாண்டா எம்.பி., சமீபத்தில் சென்னையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசியதாகவும், அப்போது அன்புமணி தரப்பில், 30 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், பாமக நிறுவனர் ராமதாஸை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது இருவரும் அரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதாக சொல்லப்பட்டது. வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமக ஒன்றிணைவதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால், அது அதிமுக, பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ராமதாஸ், அன்புமணி இருவரது நிலைப்பாட்டை உற்றுநோக்கி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விரைவில் பாமகவின் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பாமகவின் இரு அணிகளும் ஒன்றிணையுமா? அது சாத்தியமானால் என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்படும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

