“என் வாழ்க்கையை நான் மாற்றுவேன்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடந்து வந்த பாதை!
ஒரு கிராமப்புற ஆசிரியரின் மகனாகப் பிறந்து, நாட்டுக்கே நீதி வழங்கும் உச்ச நிலைக்கு சூர்ய காந்த் உயர்ந்த செய்தி, கிராம மக்களிடையே பெரும் எழுச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர் மதன்கோபால் சாஸ்திரி மற்றும் இல்லத்தரசி சஷி தேவி ஆகியோருக்கு மகனாக 1962 பிப்ரவரி 10 அன்று பிறந்த சூர்ய காந்த், அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.
குளிர்கால இரவுகளில் தரையின் குளிரைத் தவிர்க்க வைக்கோல் மற்றும் போர்வை பரப்பிக் கொண்டு படித்தார்; உழைப்பே அவரின் வழி, என மூத்த சகோதரர் ரிஷி காந்த் நினைவுகூர்கிறார். 1981இல் ஹிசார் அரசு கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 1984இல் ரோஹ்தக்கின் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டம் முடித்து, குடும்பத்தில் முதல் சட்ட பட்டதாரியானார். 38 வயதிலேயே ஹரியானாவின் இளம் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட பெருமையை 2000 ஜூலை 7 அன்று பெற்றார்.
பின்னர் 2004இல் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும், 2018இல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2019இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார். இப்போது அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்று, தேசத்தின் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்து நீதிப் பரிபாலனம் செய்ய இருக்கிறார். சட்டக் கல்வியில் குடும்பப் பாரம்பரியம் இல்லாதவர், நாட்டின் நீதித்துறையின் உச்சியை அடைந்திருப்பது, இந்திய அரசியலமைப்பின் சமத்துவச் சக்தியைப் பறைசாற்றுகிறது.

