தெற்கு ரயில்வே, தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தெற்கு ரயில்வே, தகவல் அறியும் உரிமைச் சட்டம்pt web

தெற்கு ரயில்வேயில் லோகோ பைலட் பற்றாக்குறை; ரயில் இயக்கம் பாதிப்பு... RTI-யால் வெளியான தகவல்!

தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில், லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) பணியிடங்களில் காணப்படும் பெரும் பற்றாக்குறை, ரயில் சேவைகளின் செயல்திறனை பாதிப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
Published on
Summary

RTI மூலம் தெற்கு ரயில்வேயில் லோகோ பைலட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சென்னை பிரிவில் 22.5% பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. பணிச்சுமை அதிகரிப்பால் ஊழியர்கள் உடல் மற்றும் மனநலத்தில் பாதிக்கப்படுகின்றனர். புதிய நியமனங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன என ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் - பிரசன்ன வெங்கடேஷ்

சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் தயானந்த கிருஷ்ணன் தெற்கு ரயில்வேயிடம் RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில், தெற்கு ரயில்வேயின் நான்கு முக்கிய கோட்டங்களிலும் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக, பயணிகள் ரயில், மெயில் / எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களின் அன்றாட இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, பணிச்சுமை அதிகரிப்பும், அதிக நேர பணியும் ரயில் ஓட்டுநர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கே நேரடியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே, சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதும், சில சேவைகள் குறைக்கப்படுவதும் இந்த நிலையின் விளைவாகவே என்றும் கூறுகின்றனர். அனைத்து கோட்டங்களையும் ஒப்பிடும்போது, சென்னை ரயில்வே கோட்டத்திலேயே மிக அதிகமான பற்றாக்குறை உள்ளது எனவும் தென்னக ரயில்வே அளித்த பதில்களின் மூலம் தெரிய வருகிறது.

லோகோ பைலட்
லோகோ பைலட்pt web

சென்னை கோட்டத்தில், மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 2,047 லோகோ பைலட் பணியிடங்களில் 1,586 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். 461 இடங்கள் காலியாக உள்ளன. இது 22.5 சதவீத பற்றாக்குறையைக் காட்டுகிறது. குறிப்பாக பயணிகள் ரயில்களுக்கான லோகோ பைலட்களில் 51.79 சதவீதமும், சரக்கு ரயில்களுக்கான லோகோ பைலட்களில் 44.44 சதவீதமும் காலியாக உள்ளது. திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் மொத்தம் 447 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 372 பேர் பணியில் உள்ளனர்; 75 இடங்கள் காலியாக உள்ளன; இது 17 சதவீத குறைபாடு ஆகும். மதுரை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 491 பணியிடங்களில் 411 பேர் பணியில் இருந்து, 80 இடங்கள் காலியாக உள்ளன; இதில், 16 சதவீத பற்றாக்குறை உள்ளது. சேலம் கோட்டத்தில் மொத்தம் 642 பதவிகளில் 556 பேர் பணியில் உள்ளனர்; 86 இடங்கள் காலியாக உள்ளது. இது, 13.4 சதவீத பற்றாக்குறை ஆகும்.

தெற்கு ரயில்வே, தகவல் அறியும் உரிமைச் சட்டம்
போருக்கு தயாராகும் அமெரிக்கா..? முப்படைகளையும் களமிறக்கிய வெனிசுலா., விமானங்களை ரத்து செய்த நாடுகள்!

இந்நிலையில், இந்தப் பணியாளர் பற்றாக்குறைகள் ரயில்வேயின் செயல்பாட்டில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக, பணியாளர்கள் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு, ஓய்வு நேரம் குறைந்து, நீண்ட தூர ரயில்களின் இயக்கத் திட்டமிடங்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, ரயில்வே அதிகாரிகள் கூடுதல் பணிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கே சிரமப்படுகின்றனர். தொடர்ந்து, திருச்சி, மதுரை, சேலம் பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள், ரயில்களின் தாமதம் மற்றும் சேவை குறைபாட்டால் தொடர்ச்சியாக அவதி அடைந்து வருவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே ஊழியர்கள்
ரயில்வே ஊழியர்கள்pt web

RTI மூலம் வெளிவந்த இந்தத் தகவல்கள், தெற்கு ரயில்வேயில் லோகோ பைலட் நியமனங்களில் வேகமான நடவடிக்கை அவசியமானதை வலியுறுத்துகிறது. மேலும், தெற்கு ரயில்வேயில் லோகோ பைலட் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்தியுள்ளன. புதிய பணியிடங்களை நிரப்புவது மட்டுமல்லாமல், பணிச்சுமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் அவசரமாக தேவைப்படுவதாக ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வே, தகவல் அறியும் உரிமைச் சட்டம்
PT EXCLUSIVE | தெற்கு ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு.. RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com