தவெக மா.செ கூட்டம்.. எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் என்ன? என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன் ?
கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சில மாவட்டங்களில் சாலை வலம் மேற்கொண்டிருந்தார். ஆனால், கரூரில் நடைபெற்ற சாலை வலத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டை தாண்டி, இந்திய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தினார் விஜய். இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் புதுச்சேரியில் சாலைவலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், QR கோட் வைத்திருந்த 5000 பேருக்கு மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய தவெக தலைவர் விஜய் மத்திய அரசை விமர்சித்த நிலையில், புதுச்சேரி அரசை பாராட்டி பேசியிருந்தார். அதோடு திமுக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், நாளை தவெக தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்த கூத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் பேசப்படும் விவகாரங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன் இந்த கூட்டத்தின் மூலம் பூத் கமிட்டிகள் வரை கட்சி கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து விவரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு , த.வெ.க. சார்பில் விஜய் பிரசார கூட்டம் வருகிற 16-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருந்த நிலையில் அதுவும் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற தவறுகள் இங்கு நடைபெறாமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

