“அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழுமூச்சோடு போராடுவேன்” - தமிழகத்தில் ஆதரவு திரட்டிய சுதர்சன் ரெட்டி!
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ள சுதர்சன் ரெட்டி, அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், விமானம் மூலம்சென்னை வந்த அவர், தியாகராய நகரில்உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்இந்தியா கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ பொதுச்செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சுதர்சன் ரெட்டி, தனக்கு வாய்ப்பு அளித்தால் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழுமூச்சோடு போராடுவேன் என உறுதியளித்துள்ளார்.