”WHAT BRO, OVER BRO” - முதல்வரை விமர்சித்த விஜய்-க்கு போஸ்டர் மூலம் மதுரை திமுகவினர் பதிலடி!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், மாநாட்டில் ”இட்ஸ் வெரி ராங் அங்கிள்” என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு விஜய் பேசியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் மதுரை முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர். விஜயின் பாணியிலேயே திமுகவினர் விஜயயை விமர்சித்திருப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அண்மையில் மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேசியிருந்தார் விஜய். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை பேச முற்பட்ட விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாட் இஸ் திஸ் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள் என விமர்சித்திருந்தார்.
முதல்வரை அங்கிள் என குறிப்பிட்டு பேசிய விஜயின் விமர்சன தொனி திமுகவினரை கோபமடைய செய்தது. அமைச்சர்கள் சிலரும், திமுக நிர்வாகிகள் பலரும் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மதுரை மாநகரம் முழுவதும் விஜய்க்கு எதிராக திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
முதல்வரை அங்கிள் என விமர்சித்த விஜயை, 'WHAT BRO, OVER BRO, அடக்கி வாசிங்க BRO என அவர் பாணியிலேயே எச்சரிக்கும் வகையில் போஸ்டரில் வாசகங்களை அச்சிட்டுள்ளனர் திமுகவினர். மேலும் மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஜனநாயக போர்க்களத்திற்கு கொள்கை வாளையும் சனாதனத்தை அறுத்தெரியும் வேலையும், பகுத்தறிவென்னும் சுயமரியாதை ஈட்டியையும் சமூகநீதிக்கான
கேடயங்களையும் வடித்து தந்திட்ட திராவிடப் பெருவேந்தரான உதயநிதியார் உடன்பிறவா தம்பிகள் உயிரோடு இருக்கும் வரை தவெக அணில் கூட்டத்தினரால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் திமுகவினரின் போஸ்டர்களால் மதுரையில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.