"இத்தனை கஷ்டப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை".. நீண்ட காலம் தொடர்ந்த அவதி.. விடைபெற்றார் விஜயகாந்த்!

மரணம் என்பது ஆற்ற முடியாத இழப்பு தான். ஆனாலும், மரணத்திற்கு முன் சந்திக்கும் உடல் சார்ந்த இன்னல்கள், வேதனைகள் போன்ற விஷயங்களைப் பார்க்கும் போது இத்தனை கஷ்டப்பட்டு விஜயகாந்த் இந்த மரணத்தை சந்தித்திருக்க வேண்டாம் என்றுதான் நாமும் சொல்லத்தோன்றுகிறது.
விஜயகாந்த்
விஜயகாந்த்pt web

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்
மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்புதிய தலைமுறை

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார்.

எண்பதுகள் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமா திரைப்பட வசூலில் ராஜாவாக திகழ்ந்தவர் விஜயகாந்த். முதல் சில திரைப்படங்கள் சரியான கவனத்தை பெறவில்லை என்றாலும் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப்பெரிய வெளியை உருவாக்கிக் கொடுத்தது. கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இதனை அடுத்து புரட்சிகரமான பல திரைப்படங்களில் நடித்தார். தூரத்து இடிமுழக்கம், ஜாதிக்கொரு நீதி, சிவப்பு மல்லி, அலை ஓசை, நீதியின் மறுபக்கம், சட்டம் ஒரு இருட்டறை, ஈட்டி போன்ற பல திரைப்படங்கள் மிக முக்கியமானவை. விஜயகாந்த் திரைப்படங்கள் என்றாலே புரட்சிக் கருத்துகள் இருக்கும், சட்டத்தில் இருக்கும் பிழைகளை துணிச்சலாக கேள்வி கேட்டிருப்பார், அரசியல் பேசப்பட்டிருக்கும் என மக்கள் கருதும்படி அவரது திரைப்படங்கள் அமைந்தன.

நூறாவது திரைப்படம் என்பது நடிகர்களுக்கு கிணற்றைத் தாண்டுவது போல். பல நடிகர்களுக்கும் அத்திரைப்படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்திருந்தன. ஆனால் நூறாவது திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிக் காட்டியவர் விஜயகாந்த். அவரது நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். படம் மிகப்பெரிய வெற்றி. அதன்பிறகே அவர் கேப்டன் என அழைக்கப்பட்டார்.

திரைவாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், மிகப்பெரிய வெற்றிகள் என பலவற்றை பார்த்த விஜயகாந்த் புரட்சிக் கலைஞர், கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் இன்று மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமில்லாமல் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை, வீட்டில் ஓய்வு என்றிருந்த விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதலே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வர ஆரம்பித்தன. அந்தாண்டின் நவம்பர் மாதத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றார். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது வழக்கம் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் அன்று அதிகளவில் பேசப்பட்டது. சிகிச்சை முடிந்து டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை திரும்பி இருந்தார் விஜயகாந்த்.

மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அடுத்து சென்னை மணப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி, தொடர் சிகிச்சையில் உடல் நிலையில் முன்னேற்றம், வீடு திரும்புதல், மீண்டும் சிகிச்சை என உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் விஜயகாந்த்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய தவறியதில்லை. அரசியல் விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தவறியதில்லை. தனது பிறந்த நாளின் போதும், பொது நிகழ்வுகளின் போதும், கட்சி நிகழ்வுகளின் போதும் தனது தொண்டர்களைச் சந்திக்க தவறியதில்லை. அனைத்திற்கும் முன்னணியில் இருந்தார் விஜயகாந்த்.

6.4.2020 தேமுதிக சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அறிக்கை வெளியிட்டிருந்தது விஜயகாந்த். “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, தேமுதிக தலைமை அலுவலகம் போன்றவற்றை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். மீண்டும் 20 ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், “கோரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந்தையே கொரோனா தாக்கியது வேதனைக்குறியதே. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கட்டு அக்டோபர் முதல்வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இடையே 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்த நிலையில் அப்போதும் சில இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தாண்டின் இடையே மருத்துவமனை சிகிச்சைக்காக துபாய் சென்றார். அப்போது, “தான் பூரண நலத்துடன் உள்ளேன்” என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தேமுதிக சார்பில் வெளியான அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் தொண்டர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியது அந்த அறிக்கை.

இந்தாண்டு பிறந்த நாளின் போது கூட தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த். இத்தகைய சூழலில் இந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஓரிரு தினங்களில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தனர். அத்தகைய சூழலில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என்று பிரேமலதா விஜயகாந்த் காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.

விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி தொண்டர்கள் மொட்டை அடித்து வழிபாடு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை ஒட்டு மொத்த தமிழகமும் அதிரும் வண்ணம் விஜயகாந்த் மறைந்தார் என்ற செய்தி வெளியானது.

விஜயகாந்த் மறைவு குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய நடிகர் இளவரசு, “இத்தனை கஷ்டப்பட்டு இந்த மரணத்தை அவர் சந்தித்திருக்க வேண்டிய தேவை இல்லை. இன்னும் கொஞ்சம் முன்னாடியே மரணம் நிகழ்ந்திருக்கலாம். அவரது மரணத்திற்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம் என்பதெல்லாம் வேறு. அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்” என கூறியிருந்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் கூட்டத்திற்கு வரும்போது, அவர்படும் இன்னல்களைப் பார்த்த பொதுமக்கள், விஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலையா என வருத்தப்பட்டனர். அவருக்கு ஓய்வு தேவை என குறிப்பிட்டிருந்தனர். அவர் கைகளைத் தூக்க கஷ்டப்பட்ட போதும், நிலையாக உட்கார முடியாமல் தவித்த போதும் பலரும் இணையத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவரது இழப்பு மீளாத் துயர் தான் எனினும் அவருக்கு விடுதலை என்பது போன்ற பதிவுகள் தற்போது காணக்கிடைக்கின்றன.

மனிதரது மரணம் என்பது ஆற்ற முடியாத இழப்பு தான். ஆனாலும் அந்த மனிதர் மரணத்திற்கு முன் சந்திக்கும் உடல் சார்ந்த இன்னல்கள், வேதனைகள் போன்ற விஷயங்களைப் பார்க்கும் போது இத்தனை கஷ்டப்பட்டு விஜயகாந்த் இந்த மரணத்தை சந்தித்திருக்க வேண்டாம் என்றுதான் நமக்கும் சொல்லத்தோன்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com