புனித ஜார்ஜ் கோட்டை | தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்.. புதிய அறிவிப்புகள் வெளியீடு!!
80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். அந்தவகையில் தான், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்திருக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பெற்றோர் சந்திரசேகர் - ஷோபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக, கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்த அவர், மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சுதந்திர தினத்தை கொண்டாடும் என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் சமரசம் இருக்கக்கூடாது; மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக மத்திய அரசோடு ஒத்துழைப்போடு செயல்படுகிறோம்; விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
புதிய அறிவிப்புகள்
இதைத்தொடர்ந்து, முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகுமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
