PT INTERVIEW : பாஜக கூட்டணிக்கு செல்லும் விஜய்? என்ன நடக்கும்? - அலசும் ப்ரியன்
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ மேலும் விமர்சனத்திற்கு உள்ளானது. கரூர் துயரம் அரசியல் களத்தில் வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும் சூழலில் அதன் போக்குகள் குறித்துப் பேசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். புதிய தலைமுறையின் நேர்ப்பட பேசு யூடியூப் தளத்தில் நெறியாளர் விஜயனுக்கு அளித்த நேர்காணல் எழுத்து வடிவில்..
அனைவரையும் உலுக்கி இருக்கும் கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டு இருக்கும் வீடியோவைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றியது?
விஜய் என்பவர் ஒரு நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கும்போது இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் இம்மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது கிடையாது. தமிழ்நாட்டு அரசியலிலேயே இது ஒரு கரும்புள்ளிதான். இது விஜயின் அரசியல் வாழ்க்கையில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், அரசியல் தலைவராக இருக்கும் தலைவர் உடனடியாக மருத்துவமனையில் சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இதனால், அவருக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லையா என்ற கேள்வி அவரை மாற்றாக நினைத்திருந்த நடுநிலையாளர்களுக்கும் எழுகிறது
மருத்துவமனைக்கு சென்றால் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பிருக்கிறது என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆனால், நீங்கள் போய்தான் தீர வேண்டும் என்று முன்வைக்கும் விமர்சனத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?
ஒரு அரசியல் தலைவராக இருந்தால் மக்களின் பிரச்னைகளில் மக்களுடன் இருக்க வேண்டும். அவரேதான் மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள் என்று அண்ணாவின் வார்த்தைகளை அடிக்கடி சொல்கிறார். அப்படி இருக்கும்போது இந்த மாதிரியான பிரச்னைகளில் மக்களுடன் இருக்க வேண்டாமா? இன்னொன்று அவரை காவல்துறைதான் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என சொன்னது என்றால் அவர் ஏன் அதை வீடியோவில் சொல்லவில்லை. மேலும், இந்த மாதிரியான துயர சம்பவம் நடக்கும்போது இவர் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் நிலைமை மோசமாகவெல்லாம் மாறாது. விஜயை பார்ப்பதற்காக சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சோக சம்பவம் நடந்தது. ஆனால், இங்கு நிலைமை வேறு. மரணம் நிகழ்கிறது. அடிபட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். அப்போது இவர் செல்லும்போது, அவ்வளவு கூட்டம் கூடாது. அதோடு, காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளித்திருக்கும். அப்படி இருக்கையில், விஜய் கரூர் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தது விஜயின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி.
அந்த வீடியோவில் விஜய் பேசும்போது ”மக்களுக்கு உண்மை தெரியும்.. அது ஒரு கட்டத்தில் அது வெளிபடும்” என்று கூறுகிறார். தொடர்ந்து, 'பழிவாங்குறதுனா என்னை பழி வாங்குங்க சிஎம் சார்.. என் தொண்டர்களை ஒன்றும் செய்யாதீர்கள்' என்று சொல்லி இந்த சம்பவத்தை அரசியலாக்குகிறார். அரசு இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு ஆணையம் அமைத்துள்ளது. காவல்துறையும் ஒரு பக்கம் விசாரித்து வருகிறது. தவெகவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு அரசியல் தலைவராக அவர், எங்களுக்குத் தெரிந்த உண்மைகளை ஆணையத்திடம் கூறுவோம்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றுதான் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து மக்களுக்கு உண்மை தெரியும்; எனக்கு உண்மை தெரியும் என்று சொல்வது ஏற்புடையதல்ல.
கடவுள் நேரில் வந்து கூறுவது போல் இருக்கிறது எனக்கூறியதன் மூலம், அவர் இந்த துயர சம்பவத்தில் சதி இருக்கிறது எனக்கூற வருகிறாரா?
சதி போன்ற விஷயங்கள் அவருக்கு அரசியல் ரீதியாக கை கொடுக்குமா என்பது போக போகத்தான் தெரியும். முழுக்க முழுக்க இது ஒரு விபத்து. ஆனால், இதன்பின் ஒரு சதி இருப்பதாக தெரியவில்லை. விஜய் பரப்புரைக்கு நேரம் தவறி வந்தார். அப்போது கூட்டம் அதிகரித்தது. அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி பலரும் மயக்கமடைந்து இறந்து போனார்கள்.. அவ்வளதுதான்.
மேலும், விஜய் கரூர் செல்லும்போதே எல்லாருக்கும் தெரியும் செந்தில் பாலாஜியைத்தான் தாக்கி பேசப்போகிறார் என்று... அதேபோல செந்தில் பாலாஜியைத்தான் தாக்கிப் பேசினார். அதுகுறித்து, செந்தில் பாலாஜியும் பேசியிருக்கிறார். 'செருப்பெல்லாம் வீசியிருப்பதாக சொல்கிறார்கள், இந்த விஷயத்தின் பின் நான்தான் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், விஜய் பரப்புரையில் என்னை பற்றி பேசியது 16 நிமிடத்தில்தான். ஆனால், செருப்பு வீசப்பட்டது 6ஆவது நிமிடத்தில், அப்படி இருக்கும் போது என்னைப்பற்றிப் பேசும்போது தான் செருப்பு வீசப்பட்டது எனக் கூறுவது தவறானத் தகவல்' என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், அவர் கரூரில் பாட்டிலுக்கு 10 ரூபாய் எனப்பேசுகிறார். ஆனால் செந்தில் பாலாஜி மட்டும்தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கினாறா? தங்கமணி இருக்கும்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கவில்லையா? விஜய் நடுநிலையான தலைவராக இருந்திருந்தால் அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கப்பட்டன எனக் கூறியிருக்க வேண்டும். திமுக ஊழலை மட்டும் பேசுவது, அதிமுக ஊழலை கண்டுகொள்ளாமல் விடுவது எந்த மாதிரியான அரசியல். ஊழலைப்பற்றிப் பேசுவதிலேயே ஒரு பாரபட்சம் இருக்கிறது.
இந்த கரூர் துயரத்தில் அவருக்கும் பங்கு இருக்கும்போது முதலமைச்சர் பழிவாங்குகிறார் என்று கூறுவது, பாதிக்கப்பட்ட தவெக தொண்டர்களின் அனுதாபத்தை வாங்க முயற்சி செய்வதாக தெரிகிறது. ஆனால், இதன்மூலம் அவர் ரசிகர்களின் அனுதாபத்தை பெறமுடியுமே ஒழிய பொதுமக்களின் நம்பிக்கையை பெற முடியாது.
அரசு எங்களை பழிவாங்க முயற்சி செய்கிறது என்பதை நிறுவ முயற்சி செய்கிறாரா விஜய்?
தொடக்கத்திலிருந்தே அதை நிறுவத்தான் தவெகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். பரப்புரைக்கு முன் காவல்துறையினர் போட்ட நிபந்தனைகள் எல்லாம் சரி என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது. 18 நிபந்தனைகள் போட்டார்கள்... சில இடங்களில் 23 நிபந்தனைகள்.. அப்படி இருந்தும் அந்த நிபந்தனைகளை பின் தொடராததால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கரூரில் 50 மீட்டர் முன்னாலேயே விஜய்க்கு காவல்துறையின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் குறிப்பிட்ட இடத்திற்கே சென்றுதான் பேசுவேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் 500 மீட்டர் முன்னாலேயே அவர் வாகனத்தின் உள்ளே மின்விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்று விட்டார். அவர் கரூர் உள்ளே வரும்போதே கையசைத்து வந்திருந்தால் விஜயை பார்க்க வந்தவர்கள், பார்த்துவிட்டு சென்றிருப்பார்கள்; இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். அரசுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதை விட பொறுப்பு விஜய்க்கு இருக்கு.. சில வாரங்களுக்கு முன்பே நீதிமன்றமும் அதை வலியுறுத்தியிருக்கிறது
விஜய்க்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசிவருகின்றன. விஜயும் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தனக்காகப் பேசியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதை எப்படிப் பார்ப்பது?
பாஜக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் இந்த கரூர் துயர சம்பவத்தை திமுக அரசுக்கு எதிராக திருப்ப வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி திமுக-விற்கு எதிராக பேசும்போது இயல்பாகவே விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்ற நிலைமை வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவும் பாஜகவும் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போது, விஜய்க்கு ஆதரவாக பேசுவதன் மூலம் அவரை எண்டிஏ கூட்டணிக்கு வரவைக்கலாம் என அவர்களும் நினைக்கிறார்கள். நீங்கள் நடுநிலையாக இந்தப் பிரச்னையை அணுகுகிறீர்கள் என்றால் அரசாங்கத்தையும் குறை சொல்வீர்கள், விஜயையும் குறை சொல்வீர்கள். இருபக்கமும்தான் பிரச்னை இருக்கிறது. ஆனால், அதிமுகவும் பாஜகவும் அரசை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு காரணம் விஜயை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வர அதிமுகவும் பாஜகவும் நினைக்கிறதோ என்ற பார்வைதான் இருக்கிறது.
பாஜக விஜயை கையிலெடுக்க முயற்சி எடுக்கிறது என்ற திருமாவளவனின் கருத்துப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..
நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், சிபிஐ கீழ் தான் இந்த விவகாரம் இருக்கும். சிபிஐ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். விஜய்தான் கட்சியின் தலைவர்.. விபத்துக்கு அவரும் ஒரு காரணம் என்று சொல்லி அவரைக் கைது செய்வதற்கு வாய்ப்புகள் இல்லையென்று சொல்ல முடியுமா? அப்படி சிபிஐ விஜயை கைது செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்போது பாஜக அங்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தாது என்பதற்கு என்ன நிச்சயம். சிபிஐ பாஜகவின் கைகளில்தானே இருக்கிறது. அது என்ன வானத்தில் இருந்தா குதித்தது. அதன்மூலம் விஜயை மிரட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதுதானே. ஆனால், இம்மாதிரியான மிரட்டல்களுக்கு எல்லாம் விஜய் பயப்படுவாரா என்பது தெரியவில்லை.
பாஜகவை எதிர்ப்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். கரூர் பரப்புரை வரைக்கும் பாஜகவை விமர்சித்துப் பேசிவிட்டார். கொள்கை எதிரி பாஜக எனப் பேசும் விஜய், இந்த ஒரு பிரச்சனைக்கு பாஜகவில் போய் சேருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படி அவர் பாஜகவிற்குபோனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு அது மிக நல்லது. பாஜக மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்று சரியாக பிரியும். திமுகவிற்கு அது இன்னும் நல்லது. அவர்கள் இன்னும் பலமாக இருப்பார்கள். அப்படி பாஜகவின் பக்கம் விஜய் செல்வாறேயானால் அவரின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும். ஏனென்றால் முதல் தேர்தலிலேயே நிலைப்பாட்டில் இருந்து மாறுவது சரியாக இருக்காது.
கரூர் துயரத்திற்குப் பிறகும் விஜய்க்கான ஆதரவு மக்களிடம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்கள் சமூகங்களைப் பிரதிபலிக்கிறதா என்பது கேள்விக்குறி.. இதை புரிந்துகொள்வது மிக சிக்கலாக இருக்கிறதே?
விஜயின் ரசிகர்கள் அவருடனேயே இருக்கிறார்கள் அதில் மாற்று கிடையாது. ஆனால், பாஜக மற்றும் அதிமுக ஐடி விங்களின் பங்கு இதில் நிறைய இருக்கிறது. "we stand with vijay" என்று கூறியதெல்லாம் பாஜக, அதிமுக ஐடி விங்தான். ஆனால், இந்த விஷயத்திற்கு பிறகு விஜய் மீதான நடுநிலை மக்களின் நம்பிக்கை குறைந்திருக்கிறது.
ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சைக்குறிய பதிவை எப்படி புரிந்து கொள்வது? இதே கருத்தை மற்ற கட்சிகள் கூறியிருந்தால் தேசியத்திற்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று பாஜகவினர் விமர்சித்திருப்பார்கள் என திமுக கூட்டணி கட்சிகள் கூறுவது பற்றி?
ஆதவ் போட்டப் பதிவை அவரே தவறு என புரிந்துகொண்டுதான் நீக்கியிருக்குறார். அவர் மீது காவல்துறை நடவடிக்கை நிச்சயம் பாயும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணியினர் நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள்... ஏனென்றால் விஜயை கூட்டணிக்கு வரவைக்க பார்க்கிறார்கள். அப்படி விஜய் கூட்டணி வைத்தால் இது அவருக்கு இரண்டாவது பின்னடைவாக அமையும்.. அவர் தனித்திருந்து எதிர்கொள்வதே அவருக்கு நல்லது.
நெருக்கடியான சூழ்நிலையில் அவர் கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
அந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலை விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. விஜய் தமிழக அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி எதிர்த்து நிற்கும் போது தனது தனித்துவத்தை கொண்டு செல்லலாம். இம்மாதிரியான சோதனைகள் வரும்போது உடனடியாக அதிமுக பாஜகவை நாடிப்போகும் போது விஜய்க்கு பின்னடைவு இருக்கும்.
முதலமைச்சர் இந்த விஷயத்தை எவ்வாறு கையாண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்... நீங்களே கூட நேர்படபேசு நிகழ்ச்சியில் விஜயை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறீர்கள்.. என்ன நினைக்கிறீர்கள்?
விஜய் மீது முதலில் வழக்குப்பதிவாவது செய்ய வேண்டும். கைது செய்வதென்பது அடுத்தகட்டம்தான். வழக்குபதிவு செய்து முதலில் விசாரிக்கவாவது வேண்டும். அவரைக் கைது செய்தால் அவர் இன்னும் பேசுபொருளாவார்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என அரசு நினைக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்னை அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் வருகிறது. எனவே, ஒவ்வொரு அடியையும் அவர் அளந்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள். சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பொது இடத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கும்போது சிலரைக் கைது செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பட்டியலில் விஜயும் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் ஏதேனும் ஒரு அரசியல் காரணங்களுக்காகத்தான் அதை செய்யாமல் இருக்கிறீர்கள் என்ற எண்ணம்தானே எழுகிறது. அப்படியானால், சட்டத்தின் ஆட்சியை நடத்துவதிலோ அல்லது முதலமைச்சர் எனும் பொறுப்பில் இருந்தோ நீங்கள் தவறுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.