ஒரே ஆள் ஜெயலலிதா.. 2வது விஜய் மட்டுமே.. தமிழக அரசியலில் அரிதான நிகழ்வு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 33(7) அனுமதிக்கும் இந்த நடைமுறை, ஜெயலலிதா 1991ல் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் முக்கிய விவாதமாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்திய அளவில் இத்தகைய போக்கு அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் இம்முறை இரு தொகுதிகள் போட்டிடவிருக்கிறார்.
மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33(7), ஒரு வேட்பாளர் இரண்டு இடங்கள் வரை போட்டியிட வழிவகை செய்கிறது. எனினும், 1996-ம் ஆண்டுக்கு முன், இந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தேசிய அளவில் நரேந்திர மோடி, ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஒரே தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னனி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, பிரதமர் மோடியும் 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதேபோலவே, 2001 தேர்தலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறி ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் மீது பல வழக்குகளில் தண்டனைப் பெற்றிருந்த நிலையில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும், 4 வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்பிறகு, 2006 தேர்தலில் தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார். இவ்வாறு, பல ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இல்லாத இந்த சூழலில் தான், விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் நீண்டகாலத்திற்குப் பிறகு, ஒருவேட்பாளர் இருதொகுதிகளில் போட்டியிடுவது பேசுபொருளாகியிருக்கிறது.

