2 இடங்களில் போட்டி ஏன்..? விஜய் போடும் தேர்தல் வியூகம்! தொகுதிகளின் கள நிலவரம் என்ன..?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு திமுக கோட்டைகளில் நேருக்கு நேர் மோத முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா பாணியில் இரு தொகுதிகளில் நிற்கிறார். இளைஞர், சிறுபான்மை வாக்குகள் இவரின் முக்கிய இலக்காக இருக்கிறது..
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளரையே எதிர்த்து களமிறங்குகிறார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை மாநகரின் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நீண்ட காலத்திற்கு பிறகு அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் தலைவர் விஜய் தான்.
முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள விஜய், தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள, ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றில் வெற்றி பெறும் வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட இருக்கிறார்.
பெரம்பூர் தொகுதி
பெரம்பூரை பொறுத்தவரை, இது தனி தொகுதியாக இருந்து, 2008ல் தொகுதி மறுசீரமைப்பின் போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதுவரை திமுக 9 முறை, மார்க்சிஸ்ட் 3 முறை, அதிமுக 3 முறை, காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுகவின் கோட்டையாக இருக்கும் இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவாக ஆர்.டி.சேகர் இருக்கிறார். தற்போது இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். தேசிய ஜனநயாகக் கூட்டணி சார்பில் பாமக களமிறங்கியிருக்கிறது.
பெரம்பூர், சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகும். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வாக்குகள் உள்ளது. குறிப்பாக இத்தொகுதியில் தவெகவுக்கு 45,000 உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுவதால், இதை விஜய் தேர்வு செய்ததாகக் சொல்லப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி
இந்த தொகுதி, 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் திமுகவே வெற்றி வாகை சூடியிருக்கிறது. 2011, 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், அப்போதைய அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தோற்கடித்து திமுக வசமாக்கியிருக்கிறார். தற்போது திமுக சார்பில் இனிகோ இருதயராஜும், அதிமுக சார்பில் ராஜசேகரனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என தெரிகிறது.
1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னனி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வரிசையில் தவெக தலைவர் விஜயும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
