தவெக வேட்பாளர் பட்டியல் | என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எங்கெங்கு போட்டி..?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக தலைவர் விஜய் தன்னை முன்னிறுத்தி களம் காணவிருக்கிறார்.
திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை திங்கட்கிழமை தொடங்கி கடைசி நாளாக ஏப்ரல் 6-ஆம் தேதி முடிய உள்ளது. இந்தசூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழத்தின் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை இன்று நுங்கம்பாக்கம் தனியார் ஹோட்டலில் நடந்த வேட்பாளர் அறிமுக விழாவில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் எங்கு போட்டியிடுகின்றனர் எனப் பார்ப்போம்.
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த தி. நகர் தொகுதியில் களம் காணவிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல, தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம். எழும்பூரில் ராஜ்மோகன், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு, திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்திய பாமா, லால்குடியில் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் களம் காணவிருக்கின்றனர்.

