ஜெம் வீரமணி வழக்கு; வாயை திறக்காதது ஏன்? - திமுக குறித்து முதல்வர் கடும் தாக்கு!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்தச்சூழலில் தான், இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார்.
இதற்காக, சாலை வழியாக பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வந்த முதல்வர் விஜய், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சாலை வலம் மேற்கொண்ட முதல்வருக்கு விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி ஆத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்ட இடத்திற்கு விஜய் வந்தார். இந்தக்கூட்டத்தில், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் உள்ளிட்டோர் முதலாவதாக உரையாற்றினர்.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் திமுக அரசில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் ஒரு தொழிலதிபர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் போது அப்போதைய முதல்வர் குடும்பத்திற்கு தெரிந்திருக்காதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
ராஜினாமா செய்தது ஏன்?
தொடர்ந்து வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசுகையில், ”என் மீது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாக அதிமுக மற்றும் திமுகவினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நான் ஏன் பதவியை ராஜினாமா செய்தேனென்றால், அதிமுக மற்றும் திமுக கூட்டணி வைக்க முடிவு செய்து ஆட்சியமைக்க முடிவு செய்தார்கள். அது எனக்கு பிடிக்காமல் அதிமுகவில் இருந்து வெளியேறினேன்” எனப் பேசினார்.
விஜய் உரை
தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை. உங்கள் வீட்டு அண்ணனாக தம்பியாக ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறேன். என் வெற்றிக்கு தமிழக மக்களே காரணம் எனத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆபாச நதி ஓடுவதாகவும், திமுகவுக்கு வாக்களித்தால் ஆபாசத்தை ஆதரிப்பதாக மாறிவிடும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து மு.க. ஸ்டாலின் அவதூறாக பேசிய வீடியோ வைரலாகி வருவதாகவும், அவர்களுடன் கூட்டணி வைக்க அதிமுக முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.
வாழ்க்கை ஒரு வட்டம்
தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஊழல் என்றால் திமுகவினர் ஆதாரத்தைக் காட்டு எனக் கூறுகின்றனர் எனவும் தன்னை பேசு கூறுகின்றனர். ஆனால், பேசினால் பேச விடாமல் திமுகவினர் கத்துவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் போல் தாங்கள் ஊழல் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்தார். மேலும், பரப்புரையில் போது நான் தவெக மற்றும் திமுக இடையே தான் பேட்டி எனக் கூறியதாகவும், ஆனால், இப்போது திமுகவினரே தவெகவுடன் மட்டுமே போட்டி எனக் கூறுவதாகவும், இதுதான் ”வாழ்க்கை ஒரு வட்டம்” எனக் கூறினார்.
மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது தனக்கும் விஜய் திமுக எதிரியாக இருப்பதாகவும், அவர்களுடன் இணைந்து கூட்டணி வைக்க முடிவு செய்ததாலேயே மரதகம் குமரவேல் தவெகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகவும் தெரிவித்து முதல்வர் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்துப் பேசினார்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு
தொடர்ந்து, ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டு சிறுமிகளை இத்தனை ஒருவன் சீரழித்துக் கொண்டிருக்கிறான். இந்த வழக்கை முந்தைய திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், தற்போது நாம் அவனை உள்ளே வைத்திருக்கிறோம். ஆனால், மு.க.ஸ்டாலின் சார் இதுகுறித்து வாயை திறக்காதது ஏன்? திமுகதான் வாயை திறக்கவில்லை என்றால் மற்றும் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு? எனக் கேள்வி எழுப்பி தனது உரையை முடித்துக் கொண்டார்.
