வேலூர் |காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் எடுத்த விபரீத முடிவு
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பட்டியூர் பகுதியில் திருமணமான இளம் ஜோடி தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் மேற்கொண்டனர்.
விசாரணையில், லத்தேரி அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27) டைல்ஸ் போடும் வேலை செய்து வரும் இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மணிகண்டன், கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெண் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் இருவரும் மணிகண்டன் வீட்டில் வசித்து வந்த நிலையில், இது குறித்து பெண் வீட்டார் கடலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணைக்கு வரும்படி இருவரையும் காவல் துறையினர் போன் செய்து அழைத்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடலூர் செல்வதாகக் கூறி சென்ற நிலையில், தங்களை பிரித்துவிடுவார்கள் என பயந்து லத்தேரி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஷ தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.