
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் பீடி சுற்றும் தொழிலாளிகளான அமீன் மற்றும் உமாயின். இவர்கள் மோடி திட்டம் என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்துள்ளனர்.
இது குறித்து கேட்டபோது, “பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த பாருக் என்பர் எங்களை போன்ற பீடிசுற்றும் தொழிலாளர்கள் சிலரிடம் கடந்த 2017-ம் ஆண்டு மோடி திட்டம் மூலம் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாகவும் இதற்காக நீங்கள் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில்தான் துவங்க வேண்டும் கூறி அழைத்து சென்று எங்களின் அனைத்து ஆவணங்களையும் வாங்கி எங்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கினார். அதற்கானை பாஸ் புக் உள்ளிட்ட எதையும் கொடுக்கவில்லை. ஆனால் பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக்கொண்டார். முதல் மூன்று மாதம் ஆயிரம் ரூபாயை எங்கள் கையில் கொடுத்தார். அதற்கு பிறகு நிறுத்திவிட்டார். நாங்கள் கேட்டதற்க்கு திட்டம் முடிந்ததாக கூறிவிட்டார். நாங்களும் அப்படியே விட்டுவிட்டோம்” என்று வெகுளித்தனமாக கூறினர். இதன் பின், சம்பந்தப்பட்ட இவர்களுக்கு தெரியாமல் அந்த வங்கிக்கணக்குகளை வைத்து பல பரிவர்த்தனைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதுதான் அடுத்த ஷாக்!
தற்போது தமிழக அரசு மகளிர் உரிமை தொகைக்கு, இவர்களின் வீட்டிலுள்ள மகளிர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த போது அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டதோடு வருமான வரி பாக்கி இருப்பதாகவும் இவர்களுக்கு கடிதம் வந்துள்ளது. இதிலும் பாருக் துவங்கிய வங்கி கணக்கில் ஒரு கோடி, 2 கோடி என பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக நோட்டீஸ் வந்துள்ளது.
இது குறித்து பாருக்கிடம் இவர்கள் விசாரித்துள்ளார். அதற்கு அவர் உரிய பதில் சொல்லாமல் அவதூறாக பேசியுள்ளார். இந்நிலையில்தான் அவர்கள் சுதாரித்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர், “நாங்கள் தினமும் பீடி சுற்றி அதில் வரும் கூலியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களால் எப்படி கோடி ரூபாய் வங்கியில் வைக்க முடியும்? தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் எத்தனை பேர் இப்படி மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என தெரியவில்லை!