”பாஜகவுடன் வைத்திருக்கும் கெட்ட சகவாசம்; அதிமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” - வன்னியரசு கேள்வி!
சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயகுமார் வைத்திருப்பார் என்று பார்த்தால், திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் தொடருவதுதான் வருத்தமளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் என்று விசிக வன்னியரசு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோரை கைது செய்யும் வரை இளைஞரின் உடலை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நெல்லையில் நிகழ்ந்த சாதி ஆணவக் கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர் .
இந்தவகையில், கண்டனத்தை பதிவு செய்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“ சாதிய படுகொலைகளை சகித்துக் கொள்ள சொல்கிறதா திமுக அரசு? அந்த இளைஞன், நல்ல வேலையில் இருந்தாலும் தங்கள் சாதியில் இல்லை என்று அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கான துணிச்சல் கொலையாளிக்கு எங்கிருந்து வந்தது? யார் அதனை தந்தது? நெல்லையில் சாதிய வன்கொடுமைகளே இல்லை என்கிறார் அப்பாவு.
கொலைகள் சொந்த காரணங்களால் நடக்கிறது என்கிறார் அமைச்சர் ரகுபதி. தங்கள் குடும்பத்தில்-நெருங்கிய உறவுகளில் ஒருவரை இழக்கும் வரை இந்த ஆட்சியாளர்கள் இவற்றை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! முதல்வரை வாழ்த்துவதற்காக அடிக்கடி தலைமை செயலகம் சென்றாலும் தலித் மக்களின் இன்னல்கள் தீர்ந்த பாடில்லை!
"தலித் மக்களின் பாதுகாவலர் அண்ணன் தளபதி தான்" எனக் கூறிக் கொண்டு தோழர் திருமா நெல்லை பக்கம் சென்றிட வேண்டாம்!”
என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில், இவரின் பதிவிற்கு கண்டம் தெரிவித்துள்ள விசிக வன்னியரசு, சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயகுமார் வைத்திருப்பார் என்று பார்த்தால், இத்தகைய துயரமான சூழலிலும், தம்பி கவின் படுகொலையில் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் தொடருவதுதான் வருத்தமளித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“ நெல்லையில் கடந்த 27.7.2025 அன்று தம்பி கவின் செல்வ கணேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கவினை காதலித்த சுபாசினியின் தம்பி சுர்ஜித் சாதி ஆணவத்தால் இப்படுகொலையை செய்துள்ளான். இவனை தூண்டி விட்டதும் சுர்ஜீத் பெற்றோர் தான். இப்படுகொலையை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இன்று மாலை தூத்துக்குடி- ஏரல் நகரத்தில் போராட்டம் நடைபெறுகிறது. எமது தலைவர் வழிகாட்டுதல் படி நான் உட்பட முன்னணி நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்கிறோம்.
இச்சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திரு @djayakumaroffcl அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால்,சாதி ஆணவப்படுகொலை செய்த சாதியவாதிகளை கண்டித்து அறிக்கை விட்டிருப்பார். அல்லது சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பார் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. இத்தகைய துயரமான சூழலிலும்,
தம்பி கவின் படுகொலையில் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் தொடருவது தான் வருத்தமளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த திரு.ஓபிஎஸ் அவர்கள் சட்டப்பேரவையில் ஜூலை மாதம் விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது, தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகளே (கவுரவ கொலைகள்) நடக்கவில்லை என்றார். அப்போது அமைச்சராக இருந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் மேசையை தட்டி வரவேற்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு சேலம் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட போது, தற்கொலை என்றே அதிமுக அரசு வாதிட்டது.
விடுதலைச்சிறுத்தைகள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய பிறகே கோகுல் ராஜ் வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்தது அன்றைய அதிமுக அரசு.இன்றைக்கு அந்த கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறை வழங்கியிருப்பதை நாடே அறியும். அதுமட்டுமல்ல 20.02.2015 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அன்றைய முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், 'மாநிலத்தில் கெளரவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. இரு சமூகத்தைச் சேர்ந்த இரு பாலரிடையே ஏற்படும் காதல் சம்பவங்களில் ஏற்படும் பிரச்னைகளில் தற்கொலை செய்து கொள்வது, சந்தேக முறையில் மரணமடைவது போன்ற சம்பவங்கள் மட்டுமே எப்பொழுதாவது நடைபெறுகின்றன' என்று அறிவித்தார்.
மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘சாதி ஆணவப் படுகொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான்.
அப்போதும் விடுதலைச்சிறுத்தைகள் சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினோம். ஆனால், சிறுத்தைகளின் கோரிக்கையை புறக்கணித்தது அதிமுக அரசு. ஒருவேளை அந்த சட்டத்தை அதிமுக கொண்டு வந்திருந்தால் இப்போது தம்பி கவின் உயிரோடு இருந்திருக்கலாம். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தேறிய தர்மபுரி இளவரசன் ஆணவப்படுகொலைக்கு பிறகு அனைத்து சமுதாயப்பேரவையை தொடங்கி,
தலித்துகளுக்கு எதிராக வெறுப்பை கட்டமைக்கும் பாமகவுடன் கடந்த 2021ல் கூட்டணி வைத்து, சாதி ஆணவப்படுகொலைகளை ஞாயப்படுத்தியதும் அதிமுக தான். அதிமட்டுமல்ல, 1997 ஆம் ஆண்டு மேலவளவில் 7 தலித்துகளை வெட்டிப்படுகொலை செய்த கொலையாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள்சிறை வழங்கியது.
அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்தது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த #அதிமுக அரசு தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதிமுகவின் தலித் விரோதப்போக்கு.
இதுவரை தலித்துகள் பாதிக்கப்பட்டு குலையுயிரும் குற்றுயுயிருமாய் இருந்த சூழலிலும் அதிமுக எந்த ஒரு போராட்டமும் நடத்தியதில்லை. கண்டன அறிக்கை கூட கொடுத்ததில்லை.நேரில் போய் பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூடசொன்னதில்லை.
ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக இவ்வளவு மலிவான அரசியலை அண்ணன் ஜெயக்குமார் செய்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருக்கிறது. எமது தலைவரை தென்மாவட்டங்களுக்கு போக வேண்டாம் என சொல்லுவது சாதியவாதிகளை வன்முறை செய்ய தூண்டி விடுவதாகவே கருதுகிறோம்.
என்ன செய்வது பாஜகவுடன் வைத்திருக்கும் கெட்ட சகவாசத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார். சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் வர்ணாசிரமம். அது தான் சனாதனம். அந்த சனாதனத்தை பாதுகாக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது சாதியத்தை பாதுகாப்பதே. அதிமுகவுக்கு தலித்துகள் மீது அக்கறை இருந்தால், இப்போதாவது, சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை வைக்கட்டும். மாநிலங்களவையிலும் மக்கள் மன்றத்திலும் இக்கோரிக்கை வைக்க அதிமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” என்று பதிவிட்டுள்ளார்.