ஐடி ஊழியர் ஆணவக் கொலை| ’சாதிய வன்கொடுமை சமூக இழிவு..’ - கமல் முதல் பா.ரஞ்சித் வரை கண்டனம்!
நெல்லையில் ஐடி ஊழியர் கவின்குமார் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற விவசாயியின் மகன் 26 வயதான கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர் மாற்றுசாதி பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாய் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் நிலையில், பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கவின்குமார் காதலித்ததாக தெரிகிறது.
இந்தசூழலில் சென்னையிலிருந்து விடுமுறைக்கு சொந்தஊர் வந்த கவின்குமாரை, தனியாக சந்தித்து பேசிய காதலிக்கும் பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) மறைத்துவைத்திருந்த அரிவாளால் வெட்டி ஆணவப் படுகொலை செய்தார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் பெற்றோரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இரண்டாவது நாளாக கவினின் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த சூழலில் கமல்ஹாசன் எம்.பி, இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
சாதிய வன்கொடுமை சமூக இழிவு.. வலுக்கும் கண்டனங்கள்!
கமல்ஹாசன்:
கவின் ஆணவக் கொலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கமல்ஹாசன், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ்:
இயக்குநர் மாரி செல்வராஜ், ”நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் … சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்:
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்" என பதிவிட்டுள்ளார்.
பா.ரஞ்சித்:
கவின் படுகொலை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், ”சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் தற்போது சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியைப் பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்” என ஆளும் அரசையும் விமர்சித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா:
எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா, “ஆணவப் படுகொலையின் மையமா தமிழ்நாடு? உடனடியாகச் சிறப்புச் சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..." என்று உலகிற்கே சமத்துவத்தைக் கற்றுக் கொடுத்த தமிழகம், திறனற்ற ஆட்சியாளர்களால் இப்போது வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது.
ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும். அதைச் சமரசமின்றி அமல்படுத்தி, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
வேல்முருகன்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிப் பழகியதற்காக சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், சமூகத்தில் இன்னும் நிலவும் பாகுபாடுகளையும், வன்முறையையும் வெளிப்படுத்துகிறது.
கவின்குமாரின் கொலைக்கு நீதி கோரிப் போராடும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்து, ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம். சமத்துவமும் நீதியும் நிலவும் சமூகத்தை உருவாக்குவது, நம் அனைவரின் பொறுப்பாகும்” என பதிவிட்டுள்ளார்.
ஆளூர் ஷாநவாஸ்:
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஆளூர் ஷாநவாஸ், “திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை: உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.
கௌதமி:
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகையும் அதிமுக கொள்ளைப்பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி, “திருநெல்வேலி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் கோர சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது.
ஆணவ கொலையை முற்றிலும் ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே?” என பதிவிட்டுள்ளார்.