”எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியதுபோல்.. விஜய் அறிவிக்கும்” - தொண்டர்கள் முன் ஆவேசமான வைகோ!
தென்காசியில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ, எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியதுபோல், விஜய் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மதிமுக பொறுப்பு எனத் தெரிவித்தார். மேலும், விஜய் தலைமையிலான ஆட்சி நீடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தென்காசியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) சார்பில் மண்டல செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய வைகோ, நம்பியாரை எம்ஜிஆர் சாட்டையால் உரி உரி என உரித்தது போல் மதிமுகவும் சாட்டையை சுழற்றும் காலம் வரும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அறிவிக்கின்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மதிமுகவின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு திருநெல்வேலி கூட்டத்தில் பேசிய அவர், தமிழக வெற்றி கழக ஆட்சி ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்து, விஜய் தலைமையிலான ஆட்சி முழுமையாக நீடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மீண்டும் தேர்தல் நடைபெற்றால் தற்போதைய வெற்றியைவிட 30 இடங்கள் கூடுதலாக விஜய் வெற்றி பெறுவார் என்றும், வரும் இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என்றும் கூறினார். விஜய்யை வெற்றி பெறச் செய்வதற்காக மதிமுகவும் வைகோவும் தெருத்தெருவாகவும், ஊர் ஊராகவும் சென்று பிரச்சாரம் செய்வோம் எனத் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரைச் சந்திக்கக் கூடாது என விஜய்யிடம் தான் தெரிவித்திருந்ததாகவும், அதன்படி அவர் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

