‘பாதியிலேயே எழுந்துசென்றால் சாப்பாடு கிடையாது..’ ஆவேசமாக பேசிய வைகோ!
தென்காசியில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசியது கவனத்தை ஈர்த்தது. இடைத்தேர்தல் வெற்றியை உறுதி செய்ய கட்சி பொறுப்பை எடுத்தார். கூட்டம் முடிவதற்கு முன்பே எழுந்து சென்றவர்களுக்கு உணவு கிடையாது என எச்சரித்தார்.
தென்காசியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) சார்பில் மண்டல செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அறிவிக்கின்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மதிமுகவின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்பார்ட்டா வீரர்களின் வீர வரலாற்றை எடுத்துரைத்த வைகோ, தனது அரசியல் பயணத்தில் இழப்புகளும் துரோகங்களும் புதிதல்ல என்று குறிப்பிட்டார். ஸ்பார்ட்டா வீரர்களைப் போலவே விடுதலைப் புலிகள் பல்வேறு நாடுகளின் ராணுவங்களையும் கலங்கடித்தவர்கள் என்றும் பேசினார்.
இதற்கிடையே, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில பெண்கள் இடையில் எழுந்து சென்றதைக் கவனித்த வைகோ, கூட்டம் முடிவதற்கு முன்பே செல்பவர்களுக்கு உணவு கிடையாது எனக் கூறி, சோர்வாக இருந்தால் வீட்டிற்குச் செல்லலாம் என்றும் தெரிவித்தார். அப்போது மற்றொருவர் பேசிக்கொண்டிருந்த நிலையில், குறுக்கிட்டு மைக்கைப் பெற்று வைகோ ஆவேசமாகப் பேசிய சம்பவம் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்தது.
இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழக மக்களுக்காகவும், தமிழுக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே என்றும், தற்போது பலரும் விவசாயி, நாம் தமிழர் என அடையாளப்படுத்திக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வைகோவைப்போல் ஒரு தலைவரை பெற்றதற்காக தொண்டர்கள் பெருமை அடைய வேண்டும் என கூறினார்.

