சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதன் நோக்கம் என்ன? பேரவை முன்னவர் துரைமுருகன் கேள்வி!
2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கப்படவிருந்தது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பேரவைக்கு வந்த சிறுதி நேரத்திலேயே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து வெளியேறியதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆளுநர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்!
ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் ஆளுநர். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் துரை முருகன் விளக்கம்..
இந்நிலையில் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து பேசிய அமைச்சரும் பேரவை முன்னவருமான துரை முருகன், “முந்தைய ஆண்டுகளை போலவே இந்தாண்டும் ஆளுநர் உரையை முடிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருக்கிறார். தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை ஆளுநர் கூறியுள்ளார். தேசிய கீதம் குறித்து கடந்த முறையே ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளார் சபாநாயகர். தமிழக சட்டப்பேரவையில் பின்பற்றப்படும் மரபின் படி உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசியகீதமும் பாடப்படுவது பின்பற்றப்படுகிறது.
ஆனால் மீண்டும் இதை ஒரு பிரச்னையாக மாற்றி ஆளுநர் அவர்கள் அரசின் உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார். இதன்மூலம் ஆளுநரின் நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாகிறது, தேசிய கீதம் மற்றும் அரசமைப்பு மீது தமிழக அரசு எப்போதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளது” என்று கூறினார்.