ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பான சட்டப்பேரவை.. தொடக்கம் முதல் முடிவு வரை என்ன நடந்தது? முழு விவரம்
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்..
2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கப்படவிருந்தது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
வந்தவேகத்தில் திரும்பிய ஆளுநர்..
2025-ன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார்.
கடந்த கூட்டத்தொடர்களிலும் ஆளுநர் உரையின் போது சர்ச்சை ஏற்பட்டு உரையை முழுமையாக முடிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில், இந்த கூட்டத்தொடரிலும் உரையை முடிக்காமல் வெளியேறினார்.
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது.. ஆளுநர் மாளிகை விளக்கம்..
ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறிய விவகாரத்தில் விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, “ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்றது.
யார் அந்த சார்? அதிமுகவினர் வெளியேற்றம்..
இதற்கிடையே சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார்? என்று வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை தங்களுடைய ஆடையில் ஒட்டியிருந்தனர். அத்துடன் யார் அந்த சார்? என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் முழக்கமிட்ட நிலையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
சில வரிகள் நீக்கப்பட்டு பதிவிடப்பட்ட ஆளுநர் மாளிகை விளக்கம்..
முதலில் ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறியது குறித்து தேசிய கீதத்தை அவமதித்ததால் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
பின்னர் முன்பு பதிவிட்ட பதிவில் இருந்த “மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதமானது பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது” என்ற வரிகள் நீக்கப்பட்டு பதிவிடப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட ஆளுநர் மாளிகை விளக்கம்:
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்”
ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..
ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில், அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
மீண்டும் மீண்டும் இதையே செய்யும் ஆளுநரின் நோக்கம் என்ன?
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் ஆளுநர் ரவி உரையை முடிக்காமல் பாதியிலேயே வெளியேறிய நிலையில், தொடர்ந்து இதையே செய்துவரும் அவரின் நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய பேரவையின் முன்னவர் துரைமுருகன், “தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை ஆளுநர் கூறியுள்ளார். தேசிய கீதம் குறித்து கடந்த முறையே ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பின்பற்றப்படும் மரபின் படி உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசியகீதமும் பாடப்படுவது பின்பற்றப்படுகிறது.
ஆனால் மீண்டும் இதை ஒரு பிரச்னையாக மாற்றி ஆளுநர் அவர்கள் அரசின் உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார். இதன்மூலம் ஆளுநரின் நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாகிறது” என்று விமர்சித்தார்.
ஆளுநர் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை..
ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறியது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில், ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிடுகிறது. உரையை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் மாதிரி பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே ஒன்றும் இல்லை, ஆளுநர் உரை மாற்றப்பட்டு சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. இந்த உரையில் திமுக அரசின் சுயவிளம்பரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. ஆளுநர் புறக்கணித்து விட்டுச் செல்லவில்லை, திட்டமிட்டே ஆளுநரை உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்” என தமிழக அரசை விமர்சித்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்..
இதற்கிடையே “அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்” என்பதை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து பேசிய சபாநாயகர்,"சட்டப்பேரவை எப்போதும் அதன் மரபை பின்பற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.
சபாநாயகர் மரபை மீறியதில்லையா?
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் "சட்டப் பேரவை மரபில் தேசிய கீதத்திற்கு இடமில்லையா? வேண்டுமென்றே தேசிய கீதத்தை புறக்கணித்துவிட்டனர். இதற்கு முன் சபாநாயகர் மரபு மீறவில்லையா?” என்ற கேள்வியுடன் விமர்சித்தார்.
ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்..
ஆளுநர் வெளியேறியது குறித்து விமர்சித்த அமைச்சர் சிவசங்கர், “வழக்கமான நடைமுறைப்படியே சட்டப்பேரவை கூடியது, ஆளுநர் நாடகம் போடுகிறார். தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகையே தான்தான் என்பதுபோல் ஆளுநர் பேசுகிறார். திமுக அரசின் சாதனைகளை கூற வேண்டும் என்பதாலேயும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதை தடுக்கவேண்டும் என்பதாலேயும் மட்டுமே ஆளுநர் வெளியேறினார்.
அதிமுக ஆட்சியிலும் பேரவையின் இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர்தான், தேசிய கீதம் பாடப்படும் வரை காத்திருக்காமல் புறப்பட்டார். தேசிய கீதத்திற்கு தமிழக மக்கள் மற்றும் சட்டப்பேரவை அவமரியாதை செய்யாது. பேரவையை அவமதித்த ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று விமர்சித்தார்.
தேசிய கீதத்துடன் பேரவை முதல்நாள் அமர்வு நிறைவு!
இத்தனை சலசலப்புகளுக்கு பின், தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் அமர்வு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்தது. நிகழ்ச்சி நிரலின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
ஜனவரி 11 வரை கூட்டத்தொடர் நீடிக்கும்..
தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் அமர்வு முடிவடைந்த நிலையில், கூட்டத்தொடரானது ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நாளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு தொடர்பாக நாளை இரங்கல் குறிப்பு வாசிப்க்கப்படும் என்றும், ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார் சபாநாயகர்.