'நாங்களே சரிசெய்து தருகிறோம்' ஆர்ப்பாட்டத்தில் சேதமான பொதுச்சொத்துகள்.. தவெகவின் அடுத்த மூவ்?
சிவானந்தா சாலையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்சொத்துகள் சேதமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாங்களே சரி செய்து தருவதாக சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உட்பட, கடந்த 4 ஆண்டுகளில் விசாரணையின்போது உயிரிழந்த 24 பேரின் மரணித்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில், காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரும் மேடையில் ஏற்றப்பட்டனர். கருப்பு உடையில் வந்த விஜய், ‘சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்’ என்ற பதாகையை ஏந்தி நின்றிருந்தார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசி முடிக்க, கடைசியாக கண்டன உரை ஆற்றியிருந்தார் விஜய்.
இந்த கூட்டத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில்தான், மேடையில் இருந்த விஜய்யை காண்பதற்காக தவெக தொண்டர்கள் முந்தி அடித்துக்கொண்டும், தடுப்புகள் மீதும் ஏறி நின்றதால் சென்டர் மீடியனில் உள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன.
இந்த நிலையில்தான், அனுமதி வழங்கினால் சேதமடைந்த பொருட்களை தாங்களே சரி செய்து கொடுப்பதாக மாநகராட்சிக்கு தவெக கடிதம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, தவெக மாவட்டச் செயலாளரான அப்புனு என்கிற வேல்முருகன், சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல உதவி பொறியாளருக்கு இதுதொடர்பாக கடிதம் அளித்து அனுமதி கேட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, சிவானந்தா சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.. சில இடங்களில் தடுப்பு கம்பிகள் சாய்ந்துள்ளன.. தாங்கள் அனுமதி அளித்தால் இவற்றை தவெகவின் சார்பாக உடனடியாக சரி செய்து தருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சிவானந்தா சாலையில் ஏற்பட்டிருக்க கூடிய சேதங்களை ஆய்வு மேற்கொண்டு, உடைந்து கிடந்த தடுப்பு கம்பிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியபோது, பொதுச் சொத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று காவல்துறை நிபந்தனை விதித்த நிலையில், அது மீறப்பட்டதால் தாங்களே சரி செய்து தருவதாக அனுமதி கேட்டுள்ளது தவெக.