’சனிக்கிழமை மட்டுமே..’ விஜய்யை விமர்சித்த உதயநிதி.. தவெகவில் இருந்து வந்த பதிலடி!
தான் சனிக்கிழமைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை என்று பேசிய துணை முதல்வர் உதயநிதிக்கு காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் தவெக தலைவர் விஜய், அதன் ஒரு பகுதியாக மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 4 மாவட்டங்களில் பரப்புரை செய்திருக்கும் அவர், லோக்கல் மினிஸ்டர்ஸை அட்டாக் செய்து பேசுவது.. உள்ளுர் பிரச்னைகளை எடுத்துப் பேசுவது.. திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துப்பேசுவது என்ற வியூகத்தோடு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அந்த வரிசையில், இன்றைய தினம் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேச இருக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாமக்கல்லில் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தவெக இணைச் பொதுசெயலாளர் சி.டி.நிர்மல்குமார். அப்போது, விஜய் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
உதயநிதி பேச்சுக்கு பதிலடி..
சென்னை கிழக்கு மாவட்ட திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நான் ஒரு வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன், சனிக்கிழமை மட்டும் வெளியே வருகிற ஆள் நான் கிடையாது. தேதி பார்த்து மக்கள் பணி செய்ய நான் செல்வதில்லை” என்று பேசினார்.
இந்நிலையில், சனிக்கிழமை மட்டும் வெளியே வரக்கூடிய ஆள் நான் இல்லை என்ற உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலளித்த சி.டி.நிர்மல்குமார், முதலில் அவர் தூங்கி எழட்டும்.. நேரத்திற்கு வரட்டும், அவருடைய துறை பெயரே தெரியாமல் இருக்கிறார்.. என்று காட்டமாக விமர்சித்துள்ளார். விஜய்யின் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தவெக - திமுக இடையேயான நேரடி மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.