”சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல..” - விஜயை தாக்கிப் பேசிய உதயநிதி
சென்னை கிழக்கு மாவட்ட முப்பெரும் விழா கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் ஆள் நான் கிடையாது என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் செப்டம்பர்-13 ஆம் தேதி தனது பரப்புரையை ஆரம்பித்து சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, நாளை(சனிக்கிழமை) கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில், இன்று சென்னை கிழக்கு மாவட்ட முப்பெரும் விழா கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை” என விஜயை விமர்சித்து பேசியிருக்கிறார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக முப்பெரும் விழா இன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நான் ஒரு வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன், சனிக்கிழமை மட்டும் வெளியே வருகிற ஆள் நான் கிடையாது. அப்படி நான் போகிற இடமெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பற்றிக் கேட்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்க, மருத்துவ செலவுகளுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கூறுகிறார்கள். நான் நிச்சயமாக சொல்கிறேன் இன்னும் இரண்டு மாதங்களில் அதிக மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும் என்று கூறினார்.
ஏற்கனவே பச்சை பேருந்தில் ஒருவரும் மஞ்சள் பேருந்தில் ஒருவரும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மகளிர் விடியல் பயண பேருந்தான பிங்க் பேருந்து தான் ஜெய்க்கும் என தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியிருந்த நிலையில், தற்போது சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் ஆள் நான் இல்லை என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.