தமிழக முதல்வர் பற்றி அவதூறு பேச்சு.. விஜய் மீது காவல் துறையில் புகார்!
தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருச்சி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனுவில் இருப்பது என்ன?
புகார் மனுவில், கொலை மிரட்டல் விடுத்தும் கடந்த 20.09.2025 மதியம் 12 மணியளவில் சமூக வலைதளமான யூடியூப் மற்றும் தொலைகாட்சிகளில் புதிய தலைமுறை, பாலிமர் மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை என்ற பெயரில் தமிழக வெற்றி கழக தலைவர் திரு.விஜய் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் அவர்களின் குடும்பத்தையும் மிகவும் கேலமாகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும் பேசிக்கொண்டிருந்தார்.
மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இதுவரை எவ்வித அவப்பெயரையும் எடுக்காத ஒரு தலைவர், சிறந்த தமிழ்நாடு முதலமைச்சர் என்ற நற்பெயரை இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்தியில் பெற்ற ஒருதலைவரை பின் தொடர்ந்து நான் திமுகவில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தையும் மிகவும் அவதூறு பேசி அதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, சட்ட ஒழுங்குக்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி தனது அரசியல் சுயலாபம் அடைய எண்ணி பொதுமக்கள் மத்தியில் பேச்சுரிமை என்ற பெயரில் உண்மைக்கு மாறான, பொய்யான செய்தியையும் பரப்பி ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி வரும் திரு.விஜய் பேசியதை கேட்டு எனக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
பின்னர் மணப்பாறை காவல் ஆய்வாளரிடம் 20.09.2025-ம் தேதி மேற்படி புகாரை கொடுத்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு புகாரை வாங்க மறுத்துவிட்டார். எனவே மேற்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு.விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீஸிடம் மனு ரசீதும் கொடுக்க திருச்சி எஸ் பி உத்தரவிட்டார்.