”அதிமுக-வில் உதிர்வது இலைகள் அல்ல., விழுதுகள்..” - டிடிவி தினகரன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவில் உதிர்வது இலைகள் அல்ல, விழுதுகள் எனக் கூறி அதிமுகவில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அவர், அதிமுக ஒற்றுமையாக இருந்தால் நூறாண்டுகள் நீடிக்கும் எனவும், பாஜக அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ”ஜனநாயகத்திற்கான ஓட்டம்” எனும் தலைப்பில் திருப்பூரில் நடந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி மராத்தானில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ”அதிமுக ஒன்றாக இருந்தால், நூறாண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். அதிமுக ஓரணியில் இணைய வேண்டும் என பாஜக தலைவர்கள் முயற்சி செய்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள். ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை இது நட்பு ரீதியானது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”53ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்த முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். எனவே, அவர் ஆழ்ந்து யோசித்து தவெகவில் இணைந்திருக்கிறார். அந்தக் கட்சியினர் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லூர் ராஜூ அதிமுகவில் இலைகள் உதிர்ந்தால் ஆலமரம் சாயாது என்று கூறுகிறார். ஆனால், உதிர்வது விழுதுகள் என்பது அவருக்கு புரியவில்லை” எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் அமைதி பூங்கா இங்கு ஜாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுளின் பெயரையோ, மதத்தின் பெயரையோ அல்லது ஜாதியின் பெயரையோ கூறி சுமூக பிரச்சனை அரசியலாக்கி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்காமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

