”தூங்கா நகரம்; தொழில் நகரமாக மாற வேண்டும்” - முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்!
- சீ.பிரேம் குமார்
தமிழக அரசு வெளிநாடு மற்றும் உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை விரகனூர் பகுதியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில், தொழில் முதலீட்டாளர் மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. முன்னதாக, பல்வேறு அரசு மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்காக நேற்று இரவு மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை, இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இந்த மாநாட்டில், 36,660 கோடி ரூபாய் அளவிற்கு 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. மேலும், மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்த மாநாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், நலிவடைந்திருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் ஒரு பகுதியாகவே, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ’தமிழ்நாடு வளர்கிறது’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறோம். ஓசூர், தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து இன்று மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுதும் சீரான வளர்ச்சி என்று கூறியதை, எங்கள் செயல்களின் மூலம் நிரூபித்து வருகிறோம். புரிந்துணர்வு மேற்கொண்ட திட்டங்களில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது. ஒரு மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும். சட்டம், ஒழுங்கு, தொழிலுக்கு உகந்த சூழல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தே நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு உள்ளது.
மதுரைக்கு ‘தூங்கா நகரம்’ என்ற இன்னொரு பெயர் இருக்கிறது. ஆனால், மதுரையை விழிப்புடன் இருக்கும் நகரம் என்றுதான் நாம் கூறவேண்டும். மதுரையில் தமிழ் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பதற்கான சான்றுகளை நமக்கு அளித்திருக்கிறது. அதனாலேயே இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என நான் அடிக்கடி கூறி வருகிறேன். மதுரை, கோயில் நகரமாக இருந்தால் மட்டும் போதுமா? தொழில் நகரமாக மாற்ற வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை மதுரையில் நிறுவியுள்ளன. மதுரையை தொழில் நகரமாக்குவதே என் ஆசை. மேலூரில் 278.26 ஏக்கரில் பிரமாண்ட சிப்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

