செய்தியாளர் - ரமேஷ் கண்ணன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை நாளை மாலையோடு முடிவடைய இருக்கிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளார். தேனி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி, அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “நான் உங்கள் அளவிற்கு பெரிய அரசியல் அறிஞர் இல்லை. எனது தந்தை கொண்டு வந்து விட்டார், காலத்தின் கட்டாயம், நான் அரசியலில் இருக்கிறேன். விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவரும் "டாப்" ஆக இருக்கின்றனர். விஜய் கட்சி துவக்கியுள்ளார். இதை யார் முடிவு பண்ண வேண்டும், மக்கள் என்ற எஜமானர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான், நீங்கள் சொல்வது போல் நடக்கப்போகிறதா? உங்கள் எதிர்பார்ப்பும் எனது எதிர்பார்ப்பும் நடக்க போகிறதா?
மக்கள் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நடக்கப்போகிறது. மக்கள் முடிவு செய்யட்டும். நாம் ஏன் மண்டைய உடைக்க வேண்டும். எங்களுடைய விருப்பம், எங்களுடைய நம்பிக்கை எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் தமிழகத்தில் ஆட்சியமைத்து ஒரு சிறந்த ஊழலற்ற மக்களாட்சியை கொடுக்கும் என்பது மட்டுமே” என்று கூறினார்.