பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்PT WEB

முதியோர் உதவித் தொகையைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்; கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றிய ஊழியர்கள்!

வாணியம்பாடியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "முதியோர் உதவித் தொகை"யைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் செய்தியாளர் - இம்மானுவேல் பிரசன்னகுமார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அருகே உள்ள தேவஸ்தானம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சூர்யா தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் யூனியன் வங்கியில் பணியாற்றும் மணிகண்டன் என்பவர், முதியோர்களுக்கு, "முதியோர் உதவித்தொகை" வழங்கிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து அங்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாகக் கருதி மணிகண்டன் வைத்திருந்த 1 லட்சத்து 22 ஆயிரத்து 150 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 போலீசாரிடம் ஆவணங்களை சமர்ப்பித்த வங்கி ஊழியர்கள்
போலீசாரிடம் ஆவணங்களை சமர்ப்பித்த வங்கி ஊழியர்கள்

இது குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டன் யூனியன் வங்கி ஊழியர் என்பதும், முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் யூனியன் வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு, பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் வங்கி ஊழியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
கஞ்சா போதையில் நள்ளிரவில் இளைஞர் செய்த செயல்; உடந்தையாக வந்த பெண் தோழி - வெளியான சிசிடிவி வீடியோ!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com