மாஸ் காட்டி மாட்டிய இளைஞர்கள்.. 14 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.. ரத்தாகும் லைசன்ஸ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பலரும் பலவிதமாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் ஒரு சிலர் அபாயகரமான முறையில் பட்டாசுகளை வெடித்து வீடியோக்களை சோசியல் மீடியாவிலும் பதிவிட்டனர்.
அப்படி தீபாவளியன்று திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்தபடி வான வேடிக்கைகளை வெடித்து சாகசம் காட்டி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் சில இளைஞர்கள் பதிவிட்டனர்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி திருச்சி மாநகரில் மூன்று பேரும், புறநகர் பகுதியில் 11பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மேற்பார்வையில் இரண்டாவது நாளாக தீவிர வாகான சோதனை நடத்தப்பட்டது. இதில் அருள் முருகன்(24), கிரித்தீஸ் (20), வசந்த் குமார் (20), பெருமாள் (18), முகமது ரியாஸ் (21), அஜீத்குமார் (21), அஜய் (20), சக்திவேல் (20), விஜய் (18), மணிகண்டன், பர்ஷித் அலி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல், திருச்சி மாநகரில் கோட்டை காவல் நிலையத்தில் உசேன் பாஷா, அரசு மருத்துவ மனை காவல் நிலைத்தில் அஜய், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் பைக் வீலிங் செய்ய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் மாநகரில் 3பேரும், புறநகரில் 11பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைதான 14 நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். அது ஏற்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பைக் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டுவந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் கடைசியாக சமயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.