சாதிக்கு எதிராக கலக குரல் உயர்த்திய தமிழ் சான்றோர்கள்.. இன்று மவுனம் காக்கும் கட்சிகள்!
காதலை சுமந்து கொண்டிருந்த கவின் குமாரின் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டிருக்கிறது. சாதி எனும் கொடும் நஞ்சு அந்த இதயத்தை அரிவாளால் துண்டாடி இருக்கிறது. இந்த மரணம் நெல்லையை தாண்டி தமிழ்நாட்டையை உலுக்கி இருக்கிறது. ரிதன்யாவின் மரணமும், அஜித் குமாரின் மரணமும் ஏற்படுத்திய தாக்கம் மறைவதற்கு மீண்டும் ஒரு மரணம் தமிழ் நெஞ்சங்களை உலுக்கி இருக்கிறது.
இந்த ஒவ்வொரு மரணமும் சமூகத்தில் நிலவும் அழுக்கையும், ஆதிக்க மனோபாவத்தையும், அதிகார திமிரையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. காதலை நெஞ்சத்தில் சுமந்த ஒரே காரணத்திற்காக சாதி எனும் அழுக்கேறிய நோய்க்கு மீண்டும் ஒரு உயிர் பலிகடா ஆக்கி இருக்கிறது. தமிழ் சமூகம் காதலை எப்படி போற்றியது, சாதி என்று சாக்கடையை எப்படியெல்லாம் சாடியது என்று பார்ப்பதோடு, இந்த அவலத்தை கேள்வி கேட்கவே இங்கு பிரதான அரசியல் கட்சிகள் துணியவில்லை என்ற துர்பாக்கிய நிலையையும் பார்க்கலாம்.
காதலை போற்றிய தமிழ் மரபு...
"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!" என்ற பாடல் வரிகள் கொண்ட திருமண அழைப்பிதழை இன்று பலரும் பார்த்திருக்கக் கூடும். பாடலின் பொருள் முழுமையாக தெரியாமலே இந்த வரிகளை நம்மில் பலரும் ரசித்திருப்போம். குறுந்தொகையில் இடம்பெற்ற இந்த பாடல் காதலின் மேன்மையை உலகிற்கே பறைசாற்றுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலும் பதிந்து இருந்தால் வாழ வேண்டிய கவின் என்ற இளம் பிறையை நாம் இழந்து நிற்க மாட்டோம்
“என் தாய் யார் என்பதை நீ அறிய மாட்டாய். உன் தாய் யார் என்பது எனக்குத் தெரியாது. அதேபோல் என் தந்தை யார் என்று உனக்கோ, உன் தந்தை யார் என்று எனக்கோ தெரியாது. அவர்கள் உறவு முறையினரா என்பதையும் நாம் அறியோம். இவ்வாறு நம் இரு குடும்பங்களின் பின்னணி எது என்று தெரியாமலே நாம் காதலால் கட்டுண்டோம். செம்மண் நிலத்தில் பெய்கிற மழையின் நீர், மண் நிறத்தைத் தன்னிறமாக ஏற்றுச் செந்நிறமாகிப் பிரிக்க முடியாதபடிக் கலந்து கரைந்து நீரும் நிறமும் ஒன்றிவிடுவது போல நம் இருவரது நெஞ்சங்களும் அன்பு என்ற உணர்வில் சங்கமித்து விட்டன” என்பதே அந்த பாடலின் அர்த்தம். எந்தப் பின்புலமும் அறியாமல் அன்பில் கலந்துவிடுவதே காதல் என்று தமிழ் இலக்கியம் பறைசாற்றுகிறது. ஆனால், இன்று நம் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதோ நம் மரபிற்கே எதிரான அநீதி.
தமிழில் சாதிக்கு எதிரான கலக குரல்கள்!
காதலை போற்றுவதற்காகவே எண்ணிலடங்கா அகப்பாடல்களை கொண்டது நம்முடைய சங்க இலக்கியம். ஆனால், கால மாறிய பின்னர் மனிதருள் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களை துண்டாடிய நிகழ்வுகளும் அன்று முதல் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. அதனை நம்முடைய முன்னோர்களும் கண்டித்து எழுதிக் கொண்டே தான் இருந்தார்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம்முடைய வள்ளுவர் பாட, "சாதி இரண்டொழிய வேறில்லை" என்று அவ்வையாரும் பிறப்பின் அடிப்படையில் அல்ல பண்பின் அடிப்படையிலேயே வேறுபாடு என்று பாடினார்.
“பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே...” .. என்று கலக குரல் எழுப்பி ஜாதி மத மூடநம்பிக்கையை சாடினார்கள் சித்தர்கள்.
’ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ..’ என்று பாடிய பாரதியார்,
சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
என்று அடுத்த தலைமுறை குழந்தைகளை மனதில் வைத்து பாடினார்.
அடுத்து வந்த அவரது சிஷயர் பாரதிதாசன்,
இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே! .. என்று வியப்போடு கேட்டார்.
சாதி யொழித்திடல் ஒன்று-நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று!
பாதியை நாடு மறந்தால்-மற்ற
பாதி துலங்குவ தில்லை! என்று அழுத்தமாக சாதி ஒழிப்பின் அவசியத்தை உணர்த்தி பாடல் இயற்றினார் பாரதிதாசன்.
"சாதியில் கூட்டுவரோ சாத்திரத்துக்கு உள்ளாமோ என்று பட்டினத்தாரும், சாதி சமய சழக்கை விட்டேன்! என்று வள்ளலாரும் தங்களுடைய சாட்டையை சாதிக்கு எதிராக சுழற்றி இருக்கிறார்.
சாதி ஒழிப்பு எனும் நீண்ட பயணம்!
என்ன தான் நவீன சமுதாயத்தில் வாழ்ந்தாலும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுள் ஏற்றத்தாழ்வுகளை பின்பற்றும் முறை இன்னும் பழக்கத்தில் இருப்பது வெட்கக்கேடானதே. 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி சாதிய முறைக்கு எதிராக எண்ணற்ற தலைவர்கள், இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது ஒருநாளில் முடிகின்ற பிரச்னை இல்லைதான்.
ஆனால், காலம் நவீனம் ஆக ஆக பிரச்னை குறைய வேண்டுமே தவிர காட்டுமிராண்டி நிலையை நம் முன் காட்டுவது போல் நடக்கக் கூடாது. சாதியின் இன்றைய இருப்பிற்கு கலாசாரத்தின் தொடர்ச்சி, அரசியல் சூழல், சாதிய சங்கங்களின் இருப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெறும் மன நோய் என்று பார்க்காமல் சாதி இன்றும் இருப்பதற்கான எல்லா காரணங்களையும் கணக்கில் எடுத்து அதற்கு எதிராக ஒரு போரை நிகழ்த்தினால்தான் இந்த நிலை மாறும். ஒரு இயக்கமாக இதை பெரிய அளவில் எடுக்காமல் இருக்கும் வரை சாத்தியமே.
அரசியல் தலைமைகளின் நெஞ்சங்களை உலுக்கவில்லையா?
நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளரான கவின் செல்வ கணேஷ் துள்ள துடிக்க ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அந்த இளைஞரின் தாயின் கண் முன்னே இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சாதிய மனோபவத்தில் இந்த கொலை செய்திருக்கிறார். சாதியத்தின் கொடூர முகத்தின் சாட்சியாக நிகழ்ந்திருக்கும் இந்த கொலையை ஆளும் திமுகவின் முன்னணி தலைவர்களோ, அதிமுகவின் முன்னணி தலைவர்களோ, புதிதாக கட்சி களத்தில் குதித்துள்ள தவெகவின் விஜய்யோ கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறவேயில்லை.
பலரும் குரல் கொடுத்திருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முன்னணி எதிர்க்கட்சியும் இதனை எடுத்து பேசவே இல்லை என்று சோகத்திலும் அவல நிலை எடுத்துக்காட்டுகிறது.