23 அமைச்சர்கள் பதவியேற்பு | மலர்ந்த கூட்டணி ஆட்சி.. மாற்றத்தை உருவாக்கிய விஜய்!
தமிழகத்தில் விஜயின் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், அதன் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் மற்றும் தவெகவைச் சேர்ந்த 23 எம்.எல்.ஏக்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி.விஸ்வநாதன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தவெகவைச் சேர்ந்த 21 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்மூலம் 33 பேர் கொண்ட முதல்வர் விஜயின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வாரியாக சென்னையில் 7 பேருக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கும், காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் அந்தஸ்து உடைய 2 பேருக்கு சபாநாயகர், கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரைச் சேர்ந்த இரண்டு பெண் எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரையில் இரண்டு அமைச்சர்களில் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ராஜ் மோகன் - எழும்பூர், காந்தி ராஜ் - அரக்கோணம், தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர், அவினாசி - கமலி, லோகேஷ் தமிழ்செல்வன் - ராசிபுரம், மதன் ராஜா - ஒட்டபிராரம், விஸ்வநாதன் - மேலூர் உள்ளிட்ட 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், விஜய் அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி உள்ளிட்ட 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் வரை இடம்பெற சட்டம் அனுமதி அளிக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் 31 பேர், காங்கிரஸ் அமைச்சர்கள் 2 பேர் என இதுவரை 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்களை விசிக, ஐயுஎம்எல் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், தமிழகம் கூட்டணியாட்சி யுகத்தில் அடியெடுத்துவைக்கிறது. 1952இல் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜிக்குப் பின் 2026இல் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் கூட்டணியரசை அமைத்துள்ளார். கிட்டதட்ட முக்கால் நூற்றாண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கட்சி தொடங்கிய நேரத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதற்கிடையே இன்று அமைச்சராக பதவியேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஸ்குமார், ‘காமராஜர் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க, ராகுல் காந்தி வாழ்க’ என முழக்கமிட்டார். இதைப் பார்த்த ஆளுநர் அல்ரேக்கர், ‘பதவிப் பிரமாண உறுதியில் இந்த வாசகங்கள் இடம்பெறவில்லை‘எனத் தெரிவித்தார்.

