தவெக அரசு அதிரடி! மு.க.ஸ்டாலின் உருவாக்கிய குழுவுக்கு முடிவு! புதிய சட்ட ஆணையம் அமைத்து உத்தரவு
செய்தியாளர் - ராஜ்குமார். ர
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள், அதிகாரப் பகிர்வு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு கலைத்துள்ளது. ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை திறம்படச் செயல்படுத்தும் நோக்கில் புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும்.
இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் ஆளுநரின் அதிகாரங்கள், இந்தி திணிப்பு தொடர்பான விவகாரங்கள், மாநில மொழிகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் இடம்பெற்றிருந்தன.
முதல் அறிக்கையைத் தொடர்ந்து, இரண்டாவது அறிக்கையைத் தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை தமிழக அரசு கலைத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில உரிமைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தியேட்டர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தவெக அரசை அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time ஸ்டாலின் sir என்று பதில் அளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியலில் விவாதமாகியிருக்கிறது.

