தமிழ்நாட்டின் அரியணை யாருக்கு..? EXIT POLL கூறுவது என்ன? அசைக்கமுடியாத சக்தியான TVK!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம் என பல சர்வேகள் கூறுகின்றன. சில சர்வேகள் அதிமுகவையும் முன்னிலைப்படுத்த, ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தவெக 120 இடங்கள் வரை வென்று ஆட்சியை பிடிக்கலாம் என கணிக்கிறது. இதனால் மே 4 வாக்கு எண்ணிக்கையைச் சுற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் தமிழகத்தில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் 18, JVC poll ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெக 120 இடங்கள் வரை பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இவ்வாறு கருத்து கணிப்புகள் முரண்பாடான நிலையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிகைக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அசைக்கமுடியாத சக்தியான தவெக..
அதே நேரம் எந்த கருத்து கணிப்புமே ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மையை கொடுக்காத நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியமைத்தால் கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சிமைக்க முடியும் என கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்துமே தவெக அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் திமுக, அதிமுக, தவெக என யாருக்கும் முழு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

