ராகுலை சந்தித்த தமிழக காங்கிரஸார்.. பேசப்பட்டது என்ன.? எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அரசியல் களம்!
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்தித்து, திமுக கூட்டணியில் இடங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ”பாஜக, அமமுக, பாமக (அன்புமணி தரப்பு)” உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
அதேபோல, ஆளும் கட்சியான திமுக, ”காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள்” அடங்கிய, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் தொடர்கிறது. ஆனாலும், இதுவரை இல்லாத அளவில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்பி வருகிறது. திமுக தரப்பில் இருந்து, ஆட்சியில் பங்கு என்பது கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில்தான், இரு கட்சிகளுக்கும் இடையே முரன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்து கனிமொழி பேச்சு வார்த்தையை நடத்தியிருந்தார். அப்போது, காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிக இடங்கள் கேட்டதாகவும், விரைவாக தொகுதிப்பங்கீடு குறித்து பேசவேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், எதைப்பற்றி பேசப்பட்டது என்ற முழு விபரங்கள் வெளியாகவில்லை. ராகுல் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி “காங்கிரஸ்-திமுக கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே திமுக கூட்டணியில் தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஆனாலும், திமுக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில், காங்கிரஸ் நிர்வாகிகள் அவ்வப்போது எழும் ஆட்சியில் பங்கு என்ற குரல்களுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பதில் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, நேற்று திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு நிகழ்வில் பேசும்போது, காங்கிரஸில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள் என காட்டமாக தெரிவித்திருந்தார். அதேசமயம், காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இச்சூழலில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் தமிழக தேர்தல் சூழல் உள்ளிட்டவைகளை கேட்டறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் புதிதாக நியமித்த மாவட்ட தலைவர்களை காங்கிரஸ் தலைமை டெல்லி அழைத்திருந்தது. அதன்படி, நேற்று தமிழக காங்கிரஸார் டெல்லி சென்றனர். இந்தக்கூட்டத்தில் தமிழக அரசியல் சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதால், இந்தச் சந்திப்பு குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.
இதையடுத்து, இன்று தமிழ்நாடு மட்டுமின்றி ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் , ஜம்மு காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் மாநில தலைவர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில், தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் நியமிக்கப்பட்ட 77 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது புதிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியை அடி மட்டத்திலிருந்து வலுப்படுத்துவது தொடர்பாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை புதிய நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர். இந்தக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், கூட்டணி குறித்தும் தேர்தல் தொகுதிகள் குறித்தும் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை திமுக விரைவில் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”காங்கிரஸ் கட்சியுடைய தலைவர்கள் தெரிவிக்கும் வருத்தமே இதுவரைக்கும் பேச்சு வார்த்தை குழுவை திமுக அமைக்கவில்லை என்பது தான். எனவே பேச்சுவார்த்தைக் குழுவை விரைவாக திமுக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம். அதேவேளையில் திமுக மீது நாங்கள் விமர்சனங்களை வைக்கவில்லை மாறாக எங்களிடம் இருக்கும் வருத்தங்களை பதிவு செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தின் போது தேர்தலுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. தேர்தலுக்கான பேச்சுவார்த்தைக் குழு இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை என்பதை வருத்தமாக இந்த கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்கள். தேர்தல் தொடர்பாக இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று அது தொடர்பான இருக்கும் சிரமங்கள் குறித்தும் பேசினோம்.
எனவே, விரைவாக பேச்சுவார்த்தைக்கான அந்த குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் நாங்கள் வலியுறுத்துகிறோம். கூட்டணி பேச்சு வார்த்தை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தை முடித்த பின்பு அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருவார்கள். இன்று, அகில இந்திய தலைவருடன் விவாதித்த விஷயங்களை நேரடியாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து எடுத்துரைப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம், இந்தக் கூட்டத்திலும் திமுக உடனான பேச்சு வார்த்தையை தொடங்க காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியாக தெரியவருகிறது. திமுக காங்கிரசின் கோரிக்கையை ஏற்று விரைவில் பேச்சு தொகுதிப்பங்கீடு குறித்தான குழுவை விரைவில் அமைக்குமா? அமைத்தாலும் காங்கிரசின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா? காங்கிரஸ் அந்தக் கோரிக்கையை விட்டுக்கொடுத்தாலும், கேட்கும் தொகுதிகளைத் தருமா? அல்லது காங்கிரஸ் வேறொரு கூட்டணியை நோக்கிச் செல்லுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் தமிழக தேர்தல்களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கின்றன.

