டெல்லி| ராகுலை சந்திக்கும் தமிழக காங்கிரஸார்.. தேர்தலில் யாருடன் கூட்டணி..? மீண்டும் விவாதம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி தொடர்வதா அல்லது புதிய கூட்டணியை அமைப்பதா என தீர்மானிக்க ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கின்றனர். திமுகவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் தவெக கூட்டணியின் வாய்ப்பு ஆகியவை இந்த சந்திப்பில் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு, மாநாடு, கூட்டணி அமைப்பது, வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், இத்தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக மற்றும் தவெக என நான்குமுனைப் போட்டி கொண்டதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துவருகின்றனர். அதிமுக கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தரப்பு பாமக உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் உள்ளது. முதலில், பலவீனமாக இருக்கிறது எனப் பார்க்கப்பட்ட அதிமுக கூட்டணி அடுத்த அடுத்த கூட்டணி காய் நகர்த்தல்கள் மூலம் தங்கள் கூட்டணியை வலுவாக்கி வருகிறது.
அதேசமயம், திமுக கூட்டணி 2021-ல் அமைத்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அதே கூட்டணியில் தொடந்தாலும், சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. இதற்கு, தவெக எனும் மற்றுமொரு கூட்டணி வாய்ப்பு காங்கிரசுக்கு இருப்பதாலேயே கூட்டணி பேரத்தை காங்கிரஸ் கடுமையாக்கி இருக்கிறது என்ற பார்வை எழுந்து இருந்தது. ஆனால், திமுகவில் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை என காங்கிரஸ் கோரிக்கையை முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்டுவந்தது, திமுகவினருக்கு மேலும் கோபமூட்டுவதாக அமைந்தது. இந்த சூழ்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் பொது வெளிகளில் நேரடியான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனாலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து திமுகவுடனேயே கூட்டணி என்பதைக் கூறி வந்தார். இந்த சமயத்தில் தான், கனிமொழி ராகுல்காந்தி சந்திப்பு நடந்தது. அப்போது, விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை தொடங்குமாறு ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால், திமுகவில் இருந்து காங்கிரஸை தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்த சூழலில் தான், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது.. தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவைகளை கேட்டறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்ட தலைவர்கள் டெல்லிக்கு அழைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. இன்று டெல்லி சென்றிருக்கும் தமிழக காங்கிரஸார் நாளை ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் உள்ளிட்டவர்களை சந்தித்துப்பேசவிருக்கின்றனர். இதில், தமிழக காங்கிரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக, தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியும் எந்தக் கட்சிகளும் கூட்டணி வைக்காத நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்டு வரும் முரண், காங்கிரஸை தவெக பக்கம் தள்ளுமா என்பது நாளைய கூட்டத்தின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

