”காங்கிரஸில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள்..” - அமைச்சர் ராஜகண்ணப்பன்
திமுகவின் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவர், 'காங்கிரஸில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள்' என கூறினார். இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுகவின் திராவிட மாடல் அரசின் கொள்கையை அவர் வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் திமுக சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், "பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை” எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “காங்கிரஸில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா? வளர்ந்து வந்த இயக்கமாக திமுக உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். நேற்று கூட நானும் செல்வப் பெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம் போய் நிற்கிறோம். தனியா நிக்கனும் என்றாலும் ரெடி” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாக இருக்கும் காங்கிரஸை திமுக அமைச்சர் ஒருவரே கடுமையாக விமர்சித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, தமிழக சட்டபேரவையை நோக்கி தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், திமுக தரப்பில் இருந்து காங்கிரஸின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்திருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அந்தக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த சூழலில் தான், திமுக நிர்வாகிகள் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும், தவெக பக்கம் காங்கிரஸ் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், இன்று “காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள்” என திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருக்கிறார். இதையடுத்து, ராஜகண்ணப்பனின் இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

