சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு
செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டார். அப்போது இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண், ரவிச்சந்திரன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இதையடுத்து அந்த பெண் குழந்தை இவர்கள் இருவரது பராமரிப்பில் பள்ளியில் படித்து வந்தார். இந்த சூழலில் ரவிச்சந்திரன், தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பமடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிந்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு:
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு, "பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமியின் உடல், மன ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். இதை கூறுவதற்கு வார்த்தைகளே கிடையாது. உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும், ஆனால், மனதில் ஏற்பட்ட காயம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்ச உணர்வுடன் இருப்பார்கள்:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்ச உணர்வுடன் இருப்பார்கள், படிப்பில் கவனம் செலுத்த முடியாது, குணாதிசியம் தனித்துவம் முற்றிலும் மாறிவிடும் என தெரிவித்துள்ளனர். சிறுமிகளுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மூலமே ஏற்படுகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிர்ச்சி தகவல்:
இதில், அதிர்ச்சியூட்டம் தகவல் என்னவெனில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் 96 சதவீத வழக்குகள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளம் மூலம் சிறுமிகளிடம் பழகுபவர்கள், திருமணம் செய்து கொள்வதாக பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகளைச் செய்யும் குற்றவாளிகள், சிறுமிகளை மிரட்டுவதால், அவர்கள் அச்சத்துடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வலியுடன் இருப்பதையோ, அவரது குணாதிசியங்கள் மாற்றம் அடைந்திருப்பதையோ கவனிப்பதில்லை.
மாநில அரசு, கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும்:
பல இடங்களில் சிறுமிகளின் எதிர்காலம், குடும்ப சூழ்நிலை கருதி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை. இதனால் தவறு செய்யும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே சிறுமிகளுக்கு எதிராக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தரக்கூடிய பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். குழந்தைகள் நல குழுவானது, மாணவிகள் தங்கியுள்ள விடுதிகள், பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும்.
பாதுகாப்பு இல்லம் உருவாக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும்:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லம் உருவாக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனுதாரர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.