2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா., பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விபரம்.!
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், தேர்தலையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‘தமிழகம் தலை நிமிர தமிழனின பிரச்சாரப் பயணத்தின்' நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்துகொண்டு பேசவுள்ளார்.
அதன்படி, 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடைபயணம் நிறைவு விழா உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதற்காக, அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புதுறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து நிறைவு விழா நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் அமித் ஷா அவ்விழாவில், கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், இவ்விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும், இவ்விழா, புதுக்கோட்டை பாலன் நகர் அருகே உள்ள பள்ளத்தியல் பகுதியில் 48 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, அதற்கான சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விழா நடைபெறும் பகுதி முழுவதும் மத்திய காவல் துறையினர் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இவ்விழாவை முடித்துக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர், நாளை காலை 10 மணியளவில் தனியார் ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதையடுத்து, திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பங்கேற்கிறார். பின்னர், மதியம் 1.05 மணிக்கு அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கார் மூலம் புறப்பட்டு செல்லும் அவர். திருச்சி விமானநிலையத்தில் இருந்து 1.20 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

