”ரூ.25 ஆயிரத்திற்கு பீகார் பெண்கள்” - சர்ச்சை கருத்தைக் கூறிய பாஜக அமைச்சரின் கணவர்!
”ரூ.25 ஆயிரத்திற்கு பீகார் பெண்கள் திருமணத்திற்குக் கிடைப்பார்கள்” - என சர்ச்சை கருத்தைக் கூறிய உத்தரகாண்ட் பாஜக அமைச்சரின் கணவருக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.
பாஜக அமைச்சர்களும் தலைவர்களும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு சிக்கிக் கொள்வது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநில அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யாவின் கணவரும் பாஜகவின் மூத்த தலைவருமான கிரிதாரி லால் சாஹுவும் தற்போது சர்ச்சை கருத்தைச் சிக்கியுள்ளார்.
உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணம் பற்றிப் பேசியுள்ளார். அப்போது அவர், "உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்" என்று பேசியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிராகக் கண்டனம் எழுந்துள்ளது. பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவர் ஜோதி ரவுடேலா, ”சாஹுவின் மனைவி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருப்பதால், அவரது கருத்துக்கள் வெட்கக்கேடானது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். இந்த வகையான சிந்தனை மனித கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் பெண்களை சுரண்டுவது போன்ற சமூகத் தீமைகளை ஊக்குவிக்கிறது” எனச் சாடியுள்ளார்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், "பெண்களின் வாக்குகளை ரூ.10,000க்கு வாங்கிய பிறகு, இப்போது பீகாரில் இருந்து ரூ.20-25,000க்கு பெண்களை அழைத்து வருவார்கள். பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் பீகார் மற்றும் பெண்கள் மீது இதுபோன்ற நச்சு மனநிலையைக் கொண்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பீகார் தேசிய மகளிர் ஆணையம் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு கடிதம் எழுதியுள்ளது. சாஹுவின் இந்தக் கருத்துக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது. மறுபுறம், பாஜகவின் மாநில பிரிவு அவரைக் கண்டித்திருப்பதுடன், அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. இதற்கிடையே தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

