BMC தேர்தல் | வாக்கெடுப்புக்கு முன்பே 68 வார்டுகளில் வெற்றி.. மகிழ்ச்சியில் பாஜக - சிவசேனா!
மஹாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஜனவரி 15 அன்று நடத்தப்படவுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பே பாஜக - சிவசேனா கூட்டணி 68 வார்டுகளில் வெற்றி பெற்றுவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஜனவரி 15 அன்று நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வார்டுகள் பங்கீட்டை உறுதி செய்தன. அதன்படி, மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிட உள்ளன. இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஜனவரி 15 அன்று நடத்தப்படவுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பே பாஜக - சிவசேனா கூட்டணி 68 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 22 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றது. குறிப்பாக, கல்யாண்டோம்பிவிலியில் 21 வார்டுகளில் பாஜக-சிவசேனா வேட்பாளர்கள் வென்றுள்ளனர். புனே, பிம்ப்ரி சின்ச்வாட், பன்வெல், பிவாண்டி, துலே, ஜல்கான் மற்றும் அஹில்யாநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டுகளில் வென்றுள்ளது. நேற்று, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நாள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர். இது பாஜக - சிவசேனாவின் வெற்றிக்கு வித்திட்டது.
இவ்வெற்றி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே, “இந்த முன்னேற்றங்கள் மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்சியின் விரிவடைந்து வரும் தடத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முரளிதர் மொஹோல், ”போட்டியின்றி பெற்ற வெற்றிகள் கட்சியின் ஆட்சி சாதனையின் பிரதிபலிப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிகள்,எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறச் செய்ததாக உத்தவ் சிவசேனா மற்றும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

