திருவாரூர் | பள்ளி குடிநீர்த் தொட்டியிலேயே கலக்கப்பட்ட மனிதக்கழிவு; காவலரின் சகோதரர்கள் செய்த செயல்!
திருவாரூர் மாவட்டத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சியில் இருக்கிறது காரியாங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவை சமைக்க, சத்துணவு ஊழியர்கள் பள்ளிக்குச் சென்றனர். சமையல் கூடத்தின் அருகே சென்று பார்த்தபோது கூடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த நிலையில், சத்துணவு கூட்டத்திலிருந்த பொருட்கள் திருடுபோயிருந்தன.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்க் உடைக்கப்பட்டு அதில் மனித மலக்கழிவு கலக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்களும் சத்துணவு ஊழியர்களும் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், பள்ளி விடுமுறை நாளான சனி ஞாயிறு என இரு தினங்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் சென்று சத்துணவு கூட்டத்தில் உள்ள பொருட்களை எடுத்து, அவர்கள் வாங்கி வந்த கோழியையும் பள்ளி வளாகத்திலேயே சமைத்து மது அருந்தி இருக்கின்றனர்; இதனையடுத்து தண்ணீர் டேங்கை உடைத்த அவர்கள் அதில் மனிதக் கழிவைக் கலந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தில் காவலராக பணிபுரியும் ஒருவரின் சொந்த சகோதரர்கள் இருவர் இந்த செயலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களோடு இச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் கைது செய்திருக்கின்றனர். இது குறித்து இன்று மதியம் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனிடம் கேட்டபோது ‘குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள்’ என தெரிவித்திருந்தார். அதன்படி மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தற்போதுவரை அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பள்ளி வளாகத்திலிருக்கும் குடிநீர் தொட்டியிலேயே மலம் கலந்த விவகாரம் விவாதமாகியிருக்கிறது.
இந்த நிகழ்வை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மலக்கழிவுகளைக் கொட்டியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, காவல்துறை மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மலம் கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள்? சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா?
தொடக்கப்பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என @arivalayam அரசை வலியுறுத்துகிறேன்.