"குற்றவாளியின் தாயார் ஏன் கைதாகவில்லை?" - கேள்வியெழுப்பும் திருமாவளவன்..!
நெல்லை ஆணவப் படுகொலை குற்றவாளி சுர்ஜித்தின் தாயார் பெயர் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என தெரியவில்லை. தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வரும் சூழலில், இந்திய ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொறுப்படுத்தவில்லை. மாநில அரசுகளும் தமிழ்நாடு உட்பட இதனை கண்டு கொள்ளவில்லை என வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
ஏன் குற்றவாளியின் தாயார் கைது செய்யப்படவில்லை?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நெல்லையில் நடந்துள்ள ஆணவக்கொலை மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை அளிக்கிறது. அந்தக்கொலையில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் அவரது உடலும் வாங்கப்படவில்லை. படுகொலை செய்த சுர்ஜித் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கவினின் தந்தை சுர்ஜித் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 3 பேர் மீதும் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுர்ஜித் தாயார் பெயர் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என தெரியவில்லை.
ஏற்கனவே இதுபோன்று சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது கௌசல்யாவின் தந்தை, தாய், மாமா என பலரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க சட்டப்பூர்வ கடமையை ஆற்றும் என நம்புகிறேன். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் அதனை நியாயமாக விசாரிக்க வேண்டும்.
தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்..
கடந்த பத்து ஆண்டுகளாக சாதிய மற்றும் மதவாத சக்திகள் சாதிப்பெருமையை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுகிறார்கள். தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொறுப்படுத்தவில்லை. மாநில அரசுகளும் தமிழ்நாடு உட்பட இதனை கண்டு கொள்ளவில்லை.
நான் இன்று நேரடியாக அங்கே சென்று படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். மாலையில் நெல்லையில் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
விஜய் பேச்சு குறித்து பேசிய திருமாவளவன், எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை. அடுத்தடுத்து எத்தனையோ திரை கலைஞர்கள் அரசியலுக்கு வந்தார்கள். பெரும் செல்வாக்கோடு வந்தார்கள். தமிழ்நாடு திரைப்படத்தை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் காலம் மாறிவிட்டது. யார் தேவையோ அவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள் என பேசினார்.