”அதிகார மமதையில் பேசுவதா? பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்” - ஆளுநர் ரவிக்கு திருமாவளவன் கடும் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் கூறிய கருத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan
Thirumavalavanpt desk

இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற எண்ணித் துணிக என்ற நிகழ்ச்சி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஆளுநரின் அந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல தரப்பிடமும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மக்கள் போராட்டம், அரசியல் கட்சி தலையீடு இல்லாமல் மக்களே வெகுண்டெழுந்து தங்கள் உடல்நலன், பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி இறுதியாக ஒரு உச்சத்தை தொடுமளவிற்கான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதில், அரச பயங்கரவாத ஒடுக்கு முறையால் 15 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருக்கிறார். இதில் அயல்நாட்டு சதிகள் இருப்பதாகவும், பணம் வந்ததாகவும் அபாண்டமான வதந்தி பரப்புகிறார். அவர் பதவிக்கு இது அழகல்ல. இவர், தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பேசி செயல்பட்டு வருகிறார். இந்த போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கிறோம் என்றால் அது நிராகரிக்கிப்பட்டது என்று பொருள் என கூறியிருக்கிறார். இது அதிகார மமதையில் பேசி இருக்கிறார். ஒரு ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மாபெரும் சபை சட்டமன்றம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அலட்சியப்படுத்துவது, சட்டமன்றத்தால் எதுவும் செய்து விட முடியாது, ஆளுநர் நினைத்தால்தான் அது சட்டமாக்க முடியும் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போக்கினை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.” என திருமாவளவன் கடும் காட்டமாக பேசியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதன் விவரம்!

Thirumavalavan
”மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்திருக்கிறார்கள்” - ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சால் பரபரப்பு!

சட்டமன்ற தீர்மானம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதன் விவரம்!

Thirumavalavan
”தீர்மானம் நிலுவையில் இருந்தால் அதற்கான அர்த்தம் இதுதான்”- மீண்டும் சர்ச்சைக்கு வித்திடுகிறதா ஆளுநரின் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com